கடல் தாண்டி போதைப் பொருட்கள் கடத்த முயற்சி.. ஒரே அமுக்காக அமுக்கிய போலீஸ்!! 5 பேர் கைது!!

சென்னை மண்ணடியில் இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இவ்விவகாரம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

கடல் தாண்டி போதைப் பொருட்கள் கடத்த முயற்சி.. ஒரே அமுக்காக அமுக்கிய போலீஸ்!! 5 பேர் கைது!!

இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், இணை ஆணையர் தனிப்படை போலீசார் சென்னை மண்ணடி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தலைமறைவாக இருந்த 5 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 2.5 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பொருட்களை இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக வளையல் பெட்டிகளுக்குள் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி செல்ல இந்த கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களை கடத்த முயன்ற திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் ஹுசைன், முகமது சுல்தான், நாசர், ஜுனைத் மற்றும் அசார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இணை ஆணையர் தனிப்படை போலீசார் மற்றும் துறைமுகம் சரக உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய 2 நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.