கைகளை எதிர்பார்த்து மார்க்சிசம் இருக்கிறதா? இல்லை கம்யூனிசம் கொடியை கைகள் இணைந்து பிடிக்கிறதா?

இந்தி திணிப்புக்கு எதிராக நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் கமலஹாசன் ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கைகளை எதிர்பார்த்து மார்க்சிசம் இருக்கிறதா? இல்லை கம்யூனிசம் கொடியை கைகள் இணைந்து பிடிக்கிறதா?

சமீப காலமாக இந்தி திணிப்புக்கு எதிராக பல வகையான கருத்து பரிமாற்றங்கள் கட்சி ரீதியாகவும், மக்கள் கருத்துகள் மூலமாகவும் வெளிப்பட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மொழி என்பது ஒருவரது கருத்துகளைப் பரிமாறும் ஒரு ஊடகம் மட்டுமல்ல. அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது.

குறிப்பாக அதிகாரப்பூர்வமாக மட்டுமே கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அரசு மொழிகள் உள்ள இந்தியா என்ற ஜனநாயக நாட்டில், ஒரு மொழியை மட்டுமே ஒட்டு மொத்த மக்களுக்கும் திணிப்பது என்பது அநாகரிகம் என்பது தான் பலரது கருத்தாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இந்தி திணிப்பை எதிர்த்து உரக்க குரல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும் படிக்க | இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டன் உயிரிழப்பு...

அதிலும், இந்தியாவை பாஜக ஆட்சி செய்யத் துவங்கியதில் இருந்து, இந்தி திணிப்பும் அதிகமானது, இந்தி எதிர்ப்பும் அதை விட அதிகமானது. இவ்வளவு ஏன், பல இந்தி மொழி பேசுபவர்களே, இந்தி மொழியை ஒட்டு மொத்த மக்களுக்கும் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாஜக, தற்போது சட்டத்திற்கு ஏற்றது போலவே இந்தியை மக்களுக்கு புகட்டுகிறோம் என்ற பெயரில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒற்றை மொழி இந்தி என இந்தியர்களுக்கு ஒரு மொழி திணிப்பில் இறங்கியுள்ளது பல தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாபை எதிர்க்கும் பாஜக அரசை கண்டித்து பிப்- 5 மாநாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கனா மற்றும் கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இந்தி திணிப்பை ஏன் எதிர்கிறோம் என்ற கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில், சமீபத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜான் ப்ரிட்டாஸ் இது குறித்து தனது கருத்துகாளைத் தெரிவித்துள்ளார்.

அதிகார மொழி சட்டத்தின் பிரிவு 4- iii-ன் கீழ் வரும் கட்டுப்பாடுகளை இந்தி திணிப்பு எதிர்க்கிறது என தெரிவித்து, மத்திய பல்கலைகழகங்களின் பயிற்று மொழியாக இந்தி அமைக்கப்பட இருப்பதை எதிர்த்து பேசியதை, தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டிருந்தார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு கன்னட மொழிகளில் தனி தனியாக அந்தந்த மாநில அரசியல் பிரமுகர்களை டாக் செய்து

இந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் இந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா?”

என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கமலையும் டாக் செய்து பதிவிட்டதால், கமலஹாசன் இது குறித்து தனது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில்,

இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ

தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்.

என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில், “இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்” என பதிவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில், ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ யாத்ரா”வில் கமல் இணைந்து நடந்த போது, கமல் காங்கிரசுடன் இணைகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பினர். அதிலும், மேடையில் பேசும் போது,

“என் தந்தை காங்கிரஸ் காரர் தான். ஆனால், நான் ஆங்காங்கே சென்று தற்போது எனக்கென்று ஒரு கட்சியைத் துவக்கி இருக்கிறேன். ஆனால், தமிழ் மட்டுமல்ல, இந்தியன் என்ற தலைப்பே நாம் அனைவரையும் ஒரே குடும்பம் ஆக்குகிறது”

என ராகுல் காந்தி குறித்து கமல் பேசியது இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் களமிறங்கிய கமல்ஹாசன்...!

பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து பெரிதாக வெற்றிப் பெறாத பல கட்சிகள் இருந்தும், வந்த முதலே, ஆளுங்கட்சியை ஆட்டம் காண செய்த விஜய்காந்தின் தே.மு.தி.க-வுக்கு அடுத்தப்படியாக மக்களுக்கு ஓரளவு நம்பிக்கைக் கொடுக்கும் புதுமை கட்சியாக “மக்கள் நீதி மையம்” இருந்தாலும், அவ்வப்போது அக்கட்சியின் நிறுவர் மற்றும் தலைவரான கமல், ஏதாவது குழப்பும் படியாக செய்யும் செயல்களும், இது போன்ற பயங்கர வெளிப்படையான கருத்துகளாலும், அவர் மேல் இருக்கும் நம்பிக்கையை சிறிது ஆட்டம் காட்ட வைக்கிறது என்றே சொல்லலாம்.

அதிலும், எந்த கட்சியுடனும் கூட்டணியே வைக்கப் போவதில்லை என அழுத்தமாக பல முறை கோஷமிடும் கமல், சமீபத்தில் மற்ற கட்சிகளை மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பது போல இருப்பதாக பல யூகங்கள் கிளம்பியுள்ளன.

ஏன் என்றால், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமனிடம், நீங்கள் வெளியே வந்தால் பல பணிகள் செய்ய வேண்டி இருக்கும்" என்றும், வெவ்வேறு இடங்களில், அதாவது வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், நாம் மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் பல கருத்துகளைக் கூறி, தனது பக்கம் கமல் அவரை இழுக்கப் பார்த்தார் என நிகழ்ச்சி ரசிகர்கள் மட்டுமின்றி, பல அரசியல் விமர்சகர்கள் இது குறித்து கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும் படிக்க | மறைமுகமாக அழைப்பா? என்னவா இருக்கும்?

மேலும், பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுலுடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்டதால், கமல் காங்கிரசுடன் இணைய காத்திருக்கிறாரா என்ற கேள்வி கிளம்பியதையடுத்து, கேரளத்தின் சி.பி.ஐ- க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தேசிய ஆளுங்கட்சியை (பாஜக) எதிர்த்து பேசப்படும் கருத்துகளை ஆமோதித்தும் பேசக்கூடிய அவரது கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இதனால், இந்தி திணிப்பை மட்டுமே ஒரு சாக்காக வைத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கம்யூனிசக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் கைகளுடன் மக்கள் நீதி மையக் கரமும் இணைய நினைக்கிறதா என பலருக்கும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | யாத்திரையை நிறுத்த முதல்ல கொரோனா... இப்போ உளவுத்துறையா? - பாஜகவை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்