ரூபாய் 80 கோடியில் பேனா சிலை தேவை தானா?- எடப்பாடி பழனிச்சாமி!

ரூபாய் 80 கோடியில் பேனா சிலை தேவை தானா?- எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார்.

தொண்டர்களிடையே உரை

அங்கு கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் அவர் வயர்லெஸ் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- திருச்சி மாநகரமே குலுங்கும் வகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். கடல் போல் காட்சி அளிக்கும் வகையில் எனக்கு வரவேற்பு அளித்தீர்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த கட்சியும் அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இந்த இயக்கத்த ஜெயலலிதா கட்டிக்காத்தார்.

அடித்தளமிட்டது அதிமுக தான்

தமிழகம் வளம் பெறவும், சிறக்கவும் அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு தான். ஒளிமயமான எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு அ.திமு.க. அரசு தந்திருக்கிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 15 மாதங்கள் ஆகிறது. திருச்சியில் எந்த ஒரு திட்டமாவது அவர் கொண்டு வந்தாரா. என கேள்வி எழுப்பினார்.

 ஜெயலலிதா ஆட்சியில் அவர் கொண்டு வந்த மற்றும் நான் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்ற வேலையை மட்டும்தான் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஸ்டிக்கர் ஒட்டும் வேலை மட்டும்தான் நடக்கிறது. இவர் புதிய திட்டம் எதுவும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கி போட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் குடிநீர் திட்டங்கள் மெத்தனமாக முடக்கப்பட்டு கிடக்கிறது. ஆனால் திருச்சியில் நாங்கள் எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. கொள்ளிடம் கதவணை ரூ.325 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடித்து இருக்கிறோம். இதில் நீங்கள் பார்வையாளர்கள் மட்டும்தான். இதுபோன்று பல திட்டங்களை திருச்சி மாவட்ட மக்களுக்கு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார். இந்த ஆட்சியில் ஆன்லைன் ரம்மியை கொண்டு வந்தது தான் சாதனை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை, எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் இல்லை.

ரூ.80 கோடியில் பேனா சிலை தேவைதானா?

தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறிவிட்டு சென்னை மெரினாவில் ரூ. 80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? அந்த நிதியை வைத்துக்கொண்டு ஆறரை கோடி பேருக்கு பேனாவே வாங்கி தந்துவிடலாம். பேனா நினைவுச்சின்னம் வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தேர்தல் அறிக்கையில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருப்பதாக உங்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறீர்கள். இதனை தெரிந்துகொண்டு தானே தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை அளித்துவிட்டு இப்போது அந்தர்பல்டி அடிக்கிறார்கள்.

மக்களுக்கு வரி உயர்வு தான் பரிசு

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உரிமத்தொகை எப்போது தரப்போகிறீர்கள். அதுவும் கைவிரித்து விட்டார்கள். கேசுக்கு மானியம் ரூ.100 மானியம் தருவதாக கூறி அதையும் ஏமாற்றி விட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் பெற்ற ரூ12 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை நான் சட்டசபையிலேயே அறிவித்தேன். எங்கள் ஆட்சியில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த தி.மு.க. அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள. வாக்களித்த மக்களுக்கு போனசாக சொத்து வரி உயர்வு, 50 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த போகிறார்கள். கொரோனவால் 2 ஆண்டுகள் வாழ்வாதாரம் இழந்த மக்கள் இதனை எப்படி தாக்குப்பிடிக்க போகிறார்கள். அதேபோல் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணததையும் உயர்த்த போகிறார்கள்.

இதனல் அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இன்றைக்கு அ.தி.மு.க.வை சிலபேர் பிளவபடுத்த பார்க்கிறார்கள். இது உயிரோட்டமுள்ள இயக்கம். மக்களுக்கான பாடுபடும் இயக்கம்.

ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், கைகோர்த்துக்கொண்டும் அ.தி.மு.க.வை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இந்த கனவு ஒருபோதும நிறைவேறாது. அவர் (ஓ.பி.எஸ்) இந்த இயக்கத்தில் மீண்டும் வந்து இணையும் போது, 10 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அவர் பக்கம் இருந்தார்கள்.

ஆனால் துணை முதல்வர் என்ற பெரிய பதவியை நாம் அவருக்கு கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசி என்கிறார். ஆனால் அம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்த்து ஓட்டு போட்டது யார். 1989-ல் ஜெயலலிதா தன்னந்தனியாக தேர்தலுக்கு வந்தபோது போடி நாயக்கனூரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிலா ஆடை நிர்மலாவுக்கு ஓ.பி.எஸ். தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டவர்.

சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றேன்

நான் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடியில் வெற்றி பெற்றேன். 1974 முதல் அணி மாறாமல் இருக்கிறேன். இவர் முன்னின்று ரவுடிகளை ஏவி எம்.ஜி.ஆர். கட்சி தொண்டர்களுக்கு தந்த கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திவிட்டு இன்றைக்கு ஒன்றாக இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார். நான் இந்த இயக்கத்தை உயிராக நேசிக்கிறேன். அவரை போன்று நான் வியாபாரம் செய்யவில்லை. இவரைபோல எத்தனை பேர் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவும, அசைக்கவும் முடியாது. தி.மு.க.வோடு கைகோர்த்து இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைப்போருக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.