அதிமுகவின் தலைவராகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக தனது செல்வாக்கை அதிமுகவில் நிலைநிறுத்தினார்.

அதிமுகவின் தலைவராகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதிமுகவின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் போட்டியில் யார் அதிமுகவின் தலைமையை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அன்றழைக்கப்படும் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதிமுகவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர் கட்சியின் உயர்மட்ட பதவியாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். தாம் இறக்கும் வரை அவர் தொடர்ந்து அப்பதவியில் இருந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவு... முடக்கப்பட்ட அதிமுக சின்னம்

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.இராமச்சந்திரன் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதிமுக(ஜா) அணிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமை தாங்கினார். அதிமுக(ஜெ) அணிக்கு அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளரான ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவால் முதல் முறையாக அதிமுக சின்னம் முடக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி வெற்றி பெறவே அதிமுக சின்னம் ஜெயலலிதா தரப்புக்கே ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் 2016 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது நெருங்கிய தோழியும், அதிமுகவின் நிழல் தலைமையாகக் கருதப்பட்ட சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் தனி அணியாகச் செயல்பட்டார். சசிகலாவிற்கு எதிராகச் செயல்பட்டார். இந்தச் சூழ்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்லும் முன் சசிகலா ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் அதிமுகவின் மூத்த தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நீக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் ஒன்றிணைந்தனர். சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி நீக்கப்படுவதாகவும் இனி கட்சியை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்னும் இரட்டைத் தலைமை தான் வழிநடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்திரப் பொதுச்செயலாளர் என்று அறிவித்தனர்.

மீண்டும் ஒற்றைத் தலைமை கோரிக்கை

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை-ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக தனது செல்வாக்கை அதிமுகவில் நிலைநிறுத்தினார். தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் ஆதரவு பெற்றவராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார்.

அதிமுக தலைவர் ஆவாரா இ.பி.எஸ்

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுப்பெறுகிறது. கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று முன்பே அறிவித்துள்ள நிலையில் வரும் ஜூலை 11 அன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

- ஜோஸ்