அரசியல் காழ்ப்புணர்ச்சி...மக்களை திசை திருப்பவே இந்த திட்டம்...சி.வி. சண்முகம் கண்டனம்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி...மக்களை திசை திருப்பவே இந்த திட்டம்...சி.வி. சண்முகம் கண்டனம்!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திமுகவின் தேர்தல் பிரச்சாரம்:

திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அழுத்தமாக கூறியது என்னவென்றால்,  திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்படும், சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீருவோம் என்பது தான். அதன்படி தான், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

ஒரே நேரத்தில் இருவர் வீட்டில் ரெய்டு:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: 

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பணிக்காலத்தில், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு உதவியதோடு, புதிய கல்லூரியை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, ‘Essentiality Certificate’ வழங்கியதாகக் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று சென்னையில் 5 இடங்கள், சேலத்தில் 3 இடங்கள், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் தலா ஒரு இடம் என மொத்தம் அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க: ஒரு பக்கம் ரெய்டு...மறுபக்கம் ஆதரவாளர்கள் அதிரடி கைது...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

குறிப்பாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலக கட்டடத்திற்குள் மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
 
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மஞ்சங்கரனையில் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆலந்தூர் டி. எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு குழுவினர், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அலுவலகம் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சி.வி.சண்முகம் வருகை:

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை விஜய பாஸ்கர் வீட்டிற்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருடன் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி:

இதனையடுத்து, அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும், இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால், எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை பதிவு செய்து சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு செயல் பட்டு வருகிறது. 

மக்களை திசைதிருப்பவே இந்த சோதனை:

இன்றைய சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மு.க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுகவை குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம்:

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, திமுக அரசு நிறுத்திவிட்டதாக கூறிய அவர்,  விலைவாசி மற்றும் மின் கட்டண உயர்வால் மக்களுக்கு உங்கள் ஆட்சி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. அந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையை நடத்தி வருகிறார்கள் என சிவி.சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.