ஒரு பக்கம் ரெய்டு...மறுபக்கம் ஆதரவாளர்கள் அதிரடி கைது...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் குவிந்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ஒரு பக்கம் ரெய்டு...மறுபக்கம் ஆதரவாளர்கள் அதிரடி கைது...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் எல்லாம் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஸ்.பி.வேலுமணி:

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாகவும் உள்ளவர் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடியின் வலது கரமாக பார்க்கப்படும் இவர்,  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்ததுள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை: 

வேலுமணி மீது எழுந்த புகாரின் பேரில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் அவருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. 

குவிந்த ஆதரவாளர்கள்:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்வது தொடர்பாக செய்தி வெளியானதும், அதிமுக தொண்டர்கள் மற்றும் வேலுமணியின் ஆதரவாளர்கள்  அதிக அளவில் வேலுமணி வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர். ஆனால், அவர்களை போலீசார் ”சோதனை நடந்து வருவதால், இந்த பகுதியில் இருக்கக்கூடாது; கிளம்புங்கள்” எனக்கூறி தடுத்து நிறுத்தினர்.

போராட்டம்:

போலீசார் தடுத்து நிறுத்தியதால், வேலுமணியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “எங்களை அனுப்ப முடியாது...எங்கள் தலைவருக்கு ஆதரவாக நாங்கள் இங்கேயேதான் இருப்போம்” என்று கூறி காவல் துறைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு மாஜிக்கள் வீடுகளில் சோதனை..! இது 3வது முறை..! அதிகாலையிலே பரபரப்பு..!

3 வது முறையாக தொண்டர்கள்:

தற்போது 3 வது முறையாக, மேலுமணியின் வீட்டில் ரெய்டுகள் நடந்து வருகின்றது. இந்த முறையும் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும், அவர்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் எந்தவித பதற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் அதிக அளவில் வேலுமணி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.. மேலும், தொண்டர்களை தடுத்து நிறுத்தும் வகையில், பேரிகார்டுகளை ஆங்காங்கே வைத்து கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வேலுமணி வீட்டின் முன்பு பதற்றங்கள் காணப்படுகின்றன.

ஆதரவாளர்கள் கைது:

இப்படி தான் முதல் முறை ஆதரவாளர்கள் வேலுமணியின் வீட்டின் முன்பு திரண்டதால் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலை தற்போது ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, வேலுமணியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். கிட்டதட்ட 300 மேற்பட்ட ஆதரவாளர்களை கைது செய்து 2 பஸ்களில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.