பாஜகவினருக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் 2வது கூட்டம் அடுத்த மாதம் சிம்லாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். அதன்படி, நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் அவருடைய வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் 4 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. பின்னர் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது கூட்டம் குறித்து விளக்கம் அளித்த நிதிஷ்குமார், இக்கூட்டத்தின் முடிவில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்றைய ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்ததாக கூறியவர், எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவில் அடுத்த மாதம் நடக்கும் என அறிவித்தார். ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றியை பெற வேண்டும் என்று பாஜக மும்மரம் காட்டி வரும் நிலையில், இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக செய்தியாளர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.