அந்தர்பல்டி அடித்த சீமான்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! மேட்டர் என்ன?

மீண்டும் முதல்வர் ஸ்டாலினை கிழித்தெடுக்கும் சீமான்!!

அந்தர்பல்டி அடித்த சீமான்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! மேட்டர் என்ன?

கடந்த சில தினங்களாக முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என முதல்வர் ஸ்டாலினுடன் உறவாடி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல, அரசின் நடவடிக்கைகள் மீது எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளார். 

தமிழ்நாட்டில் 40 வருடங்களாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளி விட்டார்கள் எனவும், தமிழ் தேச சிந்தனையுடன் செயல்பட்டு வரும் நாம் தமிழர் என்று ஆட்சிக்கு வருகிறதோ அன்று தான் தமிழ்நாடு உருப்படும் என தேர்தல் நேரத்தில் பிரசாரத்தின் போது பொங்கி எழுந்தார் சீமான்.

திராவிடக் கட்சிகளிடம் இருந்து வெளியேற முடியாமல் அங்கும் இங்கும் உருட்டப்படும் பொதுமக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் எனவும், அரியணையை ஒருமுறையேனும் தந்து பாருங்கள் எனவும் உணர்ச்சிப் பொங்க பேசி வந்தார் சீமான். அண்ணனின் உணர்வு மிக்க, உணர்ச்சி மிக்க, கோபமிக்க, கொந்தளிப்பு மிக்க பேச்சுகளை கேட்டு, கேட்டு வெகுண்ட எழுந்த பொதுமக்களும், இளைஞர்களும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்களது ஆதரவு கரத்தை நீட்டினர். 

234 தொகுதிகளிலும் படித்த பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் தேர்தலில் நிறுத்திய நாம் தமிழர் கட்சி, 6.85% ஓட்டுகளை பெற்று அனைவராலும் பேசப்பட்டார். மின்னல் போல அவ்வப்போது மேடைகளிலும், செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு செயல்படும் எனக் கூறியும், நடைபெறும் ஆட்சியின் குற்றங்குறைகளையும், எளிதாக மக்கள் புரிந்து கொள்ளும் படி ஆவேசத்துடன் கூறி எடுத்துரைத்து வந்தார்.

இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அவரது தந்தை காலமானதை அடுத்து நொந்து போனார். சீமானை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததால் நெகிழ்ந்து போனார் சீமான்.  தி.மு.க., ஆட்சிக்கு வந்த 15வது நாளில், கொரோனா நிதி கொடுக்கும் சாக்கில் கோட்டைக்கு சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். 

அதனை தொடர்ந்து ”முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, திமுக ஆட்சியை புகழ்ந்து தள்ளினார். நேற்று வரை திராவிட கட்சிகளை கிழித்து தொங்கவிட்டவர், இப்படி மாறிவிட்டாரே என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கேள்வி கேட்க, தனது துயரத்தில் பங்கு கொண்டவர் முதல்வர் ஸ்டாலின், அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சாதுரியமாக செயல்படுகிறது திமுக அரசு என சொம்பு தூக்கத் துவங்கினார். 

சலங்கையை கட்டி விட்ட நெட்டிசன்கள் அது வேற வாய் இது நாற வாய் என வறுத்தெடுக்கத் துவங்கினர். நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கொடுத்துள்ள புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போல விரைவாக விசாரித்து நம்மையும் சிறையில் அடைத்து விடுவாரோ என்ற பயத்தாலும், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து உறவாடலாம் என்ற கனவோடும் சீமான் செயல்படுவதாக நாலாபுறமும் கூறி வந்தனர். 

இதனால் அதிருப்தியடைந்த சீமான், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுவோம் என்ற எண்ணத்தோடு ஆட்சிக்கும், ஸ்டாலினுக்கும் எதிராக பேசத் துவங்கியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியினர், அண்ணன் எது செய்தாலும் அதில் ஒரு அரசியல் பின்புலம் இருக்கும் என்கிறனர். இப்படி இருக்க உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் எழுச்சி பெறுமா நாம் தமிழர் கட்சி, கொந்தளிப்பாரா சீமான் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..