அரசியலுக்கு முழுக்குப் போடும் மாஃபா பாண்டியராஜன்... தி.மு.க.வின் அதிரடியால் திடீர் முடிவு...

தமிழகத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் அரசியலில் இருந்து ஒதுங்கி தன் நிறுவனத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. 

அரசியலுக்கு முழுக்குப் போடும் மாஃபா பாண்டியராஜன்... தி.மு.க.வின் அதிரடியால் திடீர் முடிவு...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் பாண்டியராஜன்.  சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்த்தபடி படித்தவர் பிறகு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் பட்டமும், ஜம்ஷெட்பூரில் உள்ள புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். 
 
அதன்பின்னர் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணியில் சேர்ந்தவர், அங்கு தொழில் கற்று 1992ம் ஆண்டு தனது மனைவி லதா பாண்டிராஜனுடன் இணைந்து மாஃபா என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் காரணமாக மாஃபா பாண்டியராஜன் என்றே அழைக்கப்பட்டார். 
 
தொழிலில் பல்வேறு போட்டிகளை சந்தித்த இவர் அதில் வெற்றிபெற்று C.I.E.L, H.R, INTEKRAM TECHNOLOGY , MAKFA STRATEGY என அடுத்தடுத்து புதிய நிறுவனங்களைத் தொடங்கினார்.
 
தொழிற்துறையில் சாதித்த இவரின் கவனம் பிறகு அரசியல் பக்கம் திரும்பியது. ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் தேமுதிகவில் இணைந்து 2009 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர்  பிறகு 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 
 
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, மாஃபா 
பாண்டிய​ராஜன் நிதிநிலை தொடர்பாக தொடர்ச்சியான புள்ளிவிபரங்களை அடுக்கினார். மாஃபா பேசும்போது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இரண்டு முறை குறுக்கிட்டு விளக்கம் கொடுத்தார். ஜெயலலிதாவே இப்படி விளக்கம் கொடுத்தது அப்போது பரபரப்பாக ஊடகங்களில் வெளியானது.
 
அதைத் தொடர்ந்து தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பட்டியலில் இணைந்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் மாஃபா பாண்டிய​ராஜன். அதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் முறைப்படி அதிமுகவில் இணைந்த மாஃபா பாண்டிய​ராஜனுக்கு ஆவடி தொகுதியில் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. அங்கு வெற்றி பெற்ற மாஃபா பாண்டிய​ராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி கொடுத்து பலரின் புருவத்தை உயர்த்தவைத்தார் ஜெயலலிதா. மாஃபா பாண்டிய​ராஜனுக்கு அமைச்சருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முக்கிய காரணமே அவரது ஆங்கில புலமை தான் என்று அப்போது பேசப்பட்டது. 
 
அதன்பின்னர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு சசிகலாவை ஆதரித்த  மாஃபா பாண்டிய​ராஜன் பிறகு சசிகலாவை எதிர்த்த பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார். அதன்பின் மீண்டும் அதிமுக ஒன்றான பின் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் இவருக்கு தமிழ் மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டது. 
 
மாஃபா பாண்டிய​ராஜன் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருக்கும் போது தான் தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார் என்று சொல்லி தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் வரும் தேர்தலில்  மாஃபா பாண்டிய​ராஜனை தோற்கடிப்போம் என்று அறிவித்தன. 
 
அதன்படியே 2021 சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை வென்ற ஆவடி தொகுதியில் போட்டியிட்ட  மாஃபா பாண்டிய​ராஜனை எதிர்த்து தமிழ் தேசிய, பெரியாரிய அமைப்புகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அதன் காரணமாக திமுக வேட்பாளர் ஆவடி நாசரிடம் தோல்வியடைந்தார் மாஃபா பாண்டிய​ராஜன்.
 
அதன்பின்னர் அரசியல் விவகாரங்களிலிருந்து சற்று விலகியிருந்த மாஃபா பாண்டிய​ராஜன் தற்போது 100 சதவீதம்  அரசியலிலிருந்து விலகி வணிகத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் நான் 100 சதவீதம் அரசியல் பணிகளிலும், அரசுப்பணிகளிலும் ஈடுபட்டேன். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக பணியாற்றினேன். அதனால், வணிகத்தில் 50 சதவீதம் மட்டுமே ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். தற்போது 100 சதவீதம் வணிகத்தில் ஈடுபட உள்ளேன். நான் இப்போது ஊடகங்களில் அரசியல்வாதியாக தோன்ற முடியாது. இருப்பினும், அ.தி.மு.க.வின் உறுப்பினராக நான் எப்போதும் தொடர்வேன்" என்று கூறியுள்ளார்.