50 வருஷத்துக்கும் முன்னாடி நீர் ஆதாரம்...இப்போ...மிக மோசமான கூவம் நதி...மாறியது எப்படி?

50 வருஷத்துக்கும் முன்னாடி நீர் ஆதாரம்...இப்போ...மிக மோசமான கூவம் நதி...மாறியது எப்படி?

சென்னையில் கூவம் நதி தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கியது என்றால் நம்ப முடிகிறதா... ஆம்...சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய கூவம் நதி தற்போது, இந்தியாவிலேயே அதிக மாசடைந்த நதியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், கூவம் நதியின் வரலாறு என்ன, மாசற்ற நதியாக மாறியதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....

மாசற்ற நதியாக மாறிய கூவம் :

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆறுகளை நாம் முறையாகப் பராமரிப்பது இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நிலை ரொம்பவே மோசம். கூவம், அடையாறு, கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஓடினாலும் கூட மூன்றையும் மோசமான நிலையில் தான் வைத்துள்ளது.  

இதனிடையே, இந்தியாவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 311 நதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்படி கூவம் ஆற்றில், அடையாறில் இருந்து சத்யா நகர் வரை உள்ள வழித்தடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 345 மில்லி கிராம் ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. இந்த சோதனையின் மூலம் தான் இந்தியாவில் அதிகமாக மாசடைந்த நதியாக கூவம் நதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நதி மாசடைவதற்கான காரணத்தை விளக்குகிறார் வெங்கடேசன் :

கூவம் நதியின் வரலாறு, நதி மாசடைவதற்கு காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறார் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து உருவாகும் கூவம், கிழக்கு நோக்கி சுமார் 72 கிலோமீட்டர் வரை சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  இதில் சென்னை நகரில் இந்த கூவம் ஆறு மிக மோசமாக மாசடைந்த நிலையில் உள்ளது. 

வட இந்தியாவில் சிப்பாய்க் கலகம் நடந்த போதே சென்னையில் அணைகள் கட்டுவது குறித்து பேச தொடங்கி 1868 ஆம் ஆண்டு கொசஸ்த்தலை ஆற்றின் நடுவில் சிறிய அணைகட்டி அந்த நீரை நெற்குன்றம் பக்கம் திருப்பி விட்டனர். அதன் பிறகு கூவம் நீரானது சென்னைக்குள் வரவே இல்லை,  நல்ல தண்ணீர் சென்னைக்குள் கூவம் நதியாக வந்து 140 ஆண்டுகள் ஆகிவிட்டது என்கிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் 

சென்னையின் அதீத தாகத்தை தீர்த்தது கூவம் :

சென்னையின் அதீத தாகத்தை தீர்த்தது கூவமும் கொசஸ்தலை ஆறும் தான். பின்னர் வளர்ச்சி காரணமாக இந்த இரண்டு ஆதாரங்களும் பற்றாமல் போனது. பின்னர் 1942 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பதவி ஏற்ற சத்தியமூர்த்தி சென்னைக்கு ஒரே வருடத்தில் நிரந்தரமாக நீர் ஆதாரத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக பூண்டி ஏரியை உருவாக்க திட்டமிட்டதாக வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் கூறுகிறார். 

கோடி கோடியாய் செலவு செய்தாலும் மீண்டும் கூவம் நதியை சுத்தம் செய்ய முடியாது 5 வருடத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதாக மக்களின் வரிப்பணத்தை தான் வீணடிக்கிறார்கள் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாசடைந்த நீரை 90 சதவீதம் சுத்திகரித்து பணிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் அது போன்ற வழிமுறைகளை மேற்கொண்டால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார். 

சென்னையின் ஒட்டுமொத்த தண்ணீர் ஆதாரம் என்ற பெருமையும், பழைய வரலாற்று பெருமைகளை தாங்கி மாசடைந்து நிற்கும் கூவம் நதியை அரசு மீட்டெடுக்குமா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.