என்ன நடக்கிறது ஜம்மு விமானப்படை தளத்தில்? நாட்டு மக்கள் பீதி

ஜம்மு விமானப் படை தளத்தில் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கிறது ஜம்மு விமானப்படை தளத்தில்? நாட்டு மக்கள் பீதி

ஜம்மு விமானப் படை தளத்தில் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் 2 முறை வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜம்மு விமான நிலையத்தில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு விமானப் படைதளத்தில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் இந்த தாக்குதலானது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் அதிகாலை 1.37 மணிக்கு முதல் குண்டு வீசப்பட்டதாகவும், பின்னர் 1.43 மணிக்கு திறந்த வெளியில் 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து விமானப்படை உயரதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், தேசிய வெடிகுண்டு மைய அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவுக்கு அருகே பஞ்சாப்பின் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் படைகள் பதான்கோட்டுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. ஜம்முவில் இருந்து பதான்கோட்டுக்கு வரும் மற்றும் ஜம்முவை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. பதான்கோட் விமானப் படைதளத்திலும் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.