முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகருக்கு ஸ்டாலினின் பொருளாதார குழுவில் இடம்.! 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகருக்கு ஸ்டாலினின் பொருளாதார குழுவில் இடம்.! 

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பயின்ற எஸ்.நாராயணன் 2003-04 ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராக இருந்தார். மேலும் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஆணையத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் நிதி, பெட்ரோலியம், விவசாயம், நெடுஞ்சாலை போன்ற துறைகளின் கொள்கை வடிவமைக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். 

மேலும் ஒன்றிய நிதியமைச்சகத்தின் நுண்பொருளாதாரம், மற்றும் மேக்ரோ பொருளாதார கொள்கை வடிவமைப்பு குழுவிலும் இடம்பெற்றுள்ளார். மேலும் சில தனியார் நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் தான் தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். பல்வேறு துறைகளின் இவருக்கு இருந்த அனுபவம் நிச்சயம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.