தேனியில் குடிநீர் தட்டுப்பாடு... நடவடிக்கை எடுக்குமா அரசு?

தேனியில் குடிநீர் தட்டுப்பாடு... நடவடிக்கை எடுக்குமா அரசு?

தேனி மாவட்டம்,  குன்னூர் வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வருவதால்  கிராம புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள குன்னூர் வைகை ஆற்றில் சுமார் 100க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த உறை கிணறுகளிலிருந்தே கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததன் காரணமாக ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டு உறை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.  

ஆனால் கடந்த சில மாதங்களாக வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் உறை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. போதிய நீர் வரத்து  இல்லாமல் தற்போது வைகை ஆறு வறண்டு வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சராசரியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டும்  திறக்கப்பட்டு வருகிறது. குறைந்தளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோர விவசாயிகள் மேட்டார் மூலம் சட்டவிரோதமாக நீரை விவசாயத்திற்க்கு பயன்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் குறைந்த நீர்வரத்தின் காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வரும் காரணத்தினால் கிராமப்புறப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

எனவே குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.