தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை!

அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு யாழ்.ஊடக மையத்தில் நேற்று நடைபெற்றது. 

அங்கு இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், இன்று தமிழ் அரசியல் கைதிகளின் தாய்,தந்தையர்,உற்றார்,உறவினர் ஆகியோருக்கு அரசியல் கைதிகளை சென்று பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய 12 ஆம் திகதி கைதிகள் தினம் வருகின்ற வேளையிலே ஐக்கிய நாடுகள் சபையிலே முடிவுகள் எடுக்கப்படுகின்ற இந்த கால கட்டத்திலே அவர்களை சந்திக்க முடியும் என கூறி இருக்கிறார்கள்.

உற்றார்,உறவினர்களின் பயணம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தினை கொடுப்பதாக அவர்களை வாழ்த்துகின்றேன். அவர்களுக்கு அரசியல் ரீதியாக நன்மை கிடைக்கும் என எண்ணுவது கஷ்டம். இதுவரை காலமும் தமிழ் அரசியல் கைதிகளை புறக்கணித்து வந்தார்கள். தற்போது ஜெனிவா கூட்டத்தொடரிற்காக ஒரு சில விடயங்களை பார்த்து வருகிறார்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அனைத்து விடயங்களும் செய்துகொண்டு இருக்கின்றோம். சர்வதேசத்திற்கு கூறுகின்றோம். புள்ளிவிபரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடுகின்றோம், அரசியல் தலைவர்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். ஜனாதிபதிக்கு அரசியல் கைதிகள் 10 -26 வருடங்கள் சிறை வாழ்க்கையில் இருக்கின்றார்கள் என தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அத்துடன், அவர்களின் உடல் ரீதியான நோய்களால் அவதிப்படுகிறார்கள் எனவும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருந்த போது அதற்கு சாதகமான பதிலை அளித்திருந்த போதும் அது எவ்வளவு விரைவில் நடைபெறும் என கூற முடியாது என்றார். அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு யாழ்.ஊடகமையத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த ஊடகச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க துணைத் தலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.