அசாஞ்சே நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐ.நா கருத்து!

அசாஞ்சே நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐ.நா கருத்து!

விக்கிலீக்ஸின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவது புலனாய்வு இதழியலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்லெட் கூறியுள்ளார்.

நாடு கடத்தப்படுவாரா அசாஞ்சே

பெல்மார்ஷ் சிறையில் இருக்கும் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று லண்டன் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அசாஞ்சேவை நாடு கடத்துவது மற்றும் வழக்குத் தொடரப்படுவது, ஊடக சுதந்திரம் தொடர்பான கவலைகளை எழுப்புகிறது என்று அசாஞ்சேவின் மனைவி மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்த பிறகு மிச்செல் பச்லெட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலைகளில்,  அசாஞ்சேவின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன், குறிப்பாக இந்த வழக்கில் நியாயமான விசாரணை மற்றும் உரிய நடைமுறை உத்தரவாதங்களுக்கான உரிமை வழங்கப்படவேண்டும். எனது அலுவலகம் அசாஞ்சேவின் வழக்கை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் குற்றங்களை வெளியிட்ட அசாஞ்சே

அமெரிக்காவின் இனப்படுகொலை இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் அவரை பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதை நிறுத்துமாறு அசாஞ்சேயின் சட்டக் குழு ஆகஸ்ட் 26 அன்று மேல்முறையீடு செய்தது.

அசாஞ்சேவின் சட்டக் குழு, அவரது அரசியல் கருத்துக்களுக்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுகிறார் என்று வாதிடுகிறது. தேவைப்பட்டால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று வழக்குரைஞர் ஜெனிபர் ராபின்சன் கூறினார்.

விக்கிலீக்ஸ் அதன் இணையதளம் வாயிலாக ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களின் காட்சிகள் உட்பட பல இரகசிய அரசாங்க பதிவுகளை வெளியிட்டது.

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திற்குள் சுமார் ஏழு ஆண்டுகள் தஞ்சமடைந்திருந்த ஜூலியன் அசாஞ்சேவை 2019 ஆம் அண்டு பிரிடிஷ் அதிகாரிகள் கைது செய்தனர்.