இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக மோடி பெருமிதம்!

பாரம்பரிய மருந்துகளுக்கென ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் புதிய பணிக்குழுவை அமைக்கும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும்.

இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக மோடி பெருமிதம்!

இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில்  நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சென்ற இந்திய பிரதமர் மோடி, 2 ஆவது நாள் கூட்டத்தில் பங்கேற்று உலக தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். கூட்டத்தில் பிராந்திய, மண்டல மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்புடைய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி

முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார். இதனால் இந்தியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், உலக நாடுகளை ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுரவேகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். நடப்பாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் எனக் கூறிய அவர், இந்தியாவை தலைசிறந்த உற்பத்தி முனையமாக உருவாக்குவதே தங்களது நோக்கம் என்று கூறினார்.

பாரம்பரிய மருத்துவம்

தொடர்ந்து பேசிய அவர், குஜராத்தில் பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையத்தை உலக சுகாதார அமைப்பு திறந்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.   பாரம்பரிய மருந்துகளுக்கென ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் புதிய பணிக்குழுவை அமைக்கும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்றும் அப்போது அவர் கூறினார். இதனிடையே அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியாவில் நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.