அமெரிக்காவை தாக்கிய மிக நீளமான சூறாவளி..!

80-க்கும் மேற்பட்டோர் பலி : 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்..!

அமெரிக்காவை தாக்கிய மிக நீளமான சூறாவளி..!

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நேற்றிரவு வீசிய சூறாவளியால் பல மாகாணங்கள் கடும் சேதத்தை 
சந்தித்து உள்ளனர். கடுமையாக வீசிய சூறாவளியால்,கென்டகி மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30-க்கும் 
மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிஸி மாகாணங்களிலும் சூறாவளி தாக்குதலால் மக்கள் பலியாகினர். கெண்டகியில் மட்டும் 3 லட்ச இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 10,000-க்கும் மேற்பட்டோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

200 வீடுகள் இந்த சூறாவளியால் சூறையாடப்பட்டுள்ளது. கெண்டகியில் இயங்கி வந்த மெழுகு உற்பத்தி மையம் சூறாவளியால் பலத்த சேதமடைந்ததுடன், அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலியாகினர். அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் கிடங்கில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டு 
இருந்த 6 பேர் பலியானார்கள். அமெரிக்காவை தாக்கிய மிகப்பெரிய சூறாவளிகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. கடைசியாக 1925-ல் அமெரிக்காவை தாக்கிய சூறாவளி 355 கி.மீ தூரம் சென்ற நிலையில், நேற்று வீசிய சூறாவளி 400கி.மீ தூரம் வரை பயணித்து முந்தைய சூறாவளியின் தூரத்தை முறியடித்துள்ளது. 5 மாகாணங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வரும் சூழலில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.