இருளில் மூழ்கிய காசா பகுதி... மக்கள் கடும் அவதி!!

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதி முழுவதும் மின்சார பற்றாக்குறையால் இருளில் மூழ்கியுள்ளது.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழு அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. 6-வது நாளாக தொடர்ந்து வரும் போரால், பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கிட்டத்தட்ட சுமாா் இரண்டரை லட்சம் போ் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனா்.  இந்நிலையில் காஸா பகுதிக்கு மின்சாரம் வழங்கும் ஆற்றல் மையத்தில் மின்சார இருப்பு தீர்ந்ததால் மின்சாரம் முழுவதும் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே இருளில் முழ்கியுள்ளது.

மேலும் காஸா பகுதிக்குள் செல்லும் உணவு, மின்சாரம், எரிபொருள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள், குடியிருப்புகள் என எந்தப் பகுதியிலும் ஜெனரேட்டர் உள்ளிட்ட எதுவும் வேலை செய்யாத சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உணவு, தண்ணீருக்கும் தட்டுப்பாட்டால் காசா நகரில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். 

இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் எரிசக்தித்துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ரஷிய அதிபர் புதின் தொிவித்துள்ளாா்.

இதற்கிடையே உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2 புள்ளி 25 டாலர் அதிகரித்து 86 புள்ளி 83 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது