உக்ரைன், ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சு.. என்ன நடந்தது?

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு, ரஷ்ய அதிபர் புதினை  பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன், ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சு.. என்ன நடந்தது?

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ம்தேதி போர் தொடங்கியது. அதன்பின்னர் இரு நாட்டு அதிபர்களுடனும் பிரதமர் மோடி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐநா அவசர பொதுக்கூட்டத்தின்போது ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. தீர்மானத்தின்போது ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்தது.

இந்நிலையில்  நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த உரையாடலின்போது போர் நிறுத்தம், பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்பது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியர்களை மீட்க உதவி வரும் உக்ரைன் அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மோடி, எஞ்சியுள்ளவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். குறிப்பாக பதற்றம் அதிகம் காணப்படும் சுமி நகரில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு மோடி வலியுறுத்தினார்.

இதனைதொடர்ந்து  ரஷ்ய அதிபர் புதினையும் போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.மேலும் இந்திய மாணவர்களை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்  தெரிவித்தார். அதற்கு இந்திய மாணவர்கள் வெளியேற்றும் நடவடிக்கைக்க்கு ரஷ்யா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என புதின், பிரதமர் மோடியிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.