பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு.. பாக். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து  அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு.. பாக். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஊழலற்ற அரசை ஏற்படுத்துவேன் என உறுதி அளித்து பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டவர் இம்ரான் கான். ஆனால் 2018ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் தற்போது வரை பொருளாதார நெருக்கடி சூழலுக்கே வித்திட்டதாக கூறி அவரை பதவி விலக எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதுதொடர்பான விவாதமும் கடந்த மாதம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. இதற்காக இன்று அவை கூடியது. இதில் இம்ரான் கான் பிரதமராக நீடிக்க மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில், 172 ஆதரவை பெறவேண்டியது அவசியம் என கூறப்பட்டது.

ஆனால் இந்த வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவை தொடங்கியதும் உரையாற்றிய துணை சபாநாயகர், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டார். பிரதமரை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தானின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி,  நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்து அவை ஒத்திவைக்கப்பட்டது.  
 
இதைத்தொடர்ந்து,  நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், கோடிக்கான பணத்தை திரட்டி தனக்கு எதிரான அணியை சிலர் உருவாக்கியிருப்பதாகவும், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான சதி எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பாகிஸ்தானியர்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்களே முடிவெடுக்க வேண்டும் என கூறினார். எனவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு 3 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்  என அதிபரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஜனநாயக முறைப்படியான தேர்தலுக்கு, மக்கள் தயாராகும்படியும் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார். 

இந்தநிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.