உக்ரைன் விவகாரம்: 3-ம் உலகப் போராக மாறும் அபாயம்!!

உறுப்பு நாடுகளின் நேரடி மற்றும் முக்கிய அச்சுறுத்தல் ரஷ்யாதான் என்று நேட்டோ அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் விவகாரம்: 3-ம் உலகப் போராக மாறும் அபாயம்!!

உக்ரைன் விவகாரம் 3-ம் உலகப் போராக மாறுமோ என்ற முந்தைய சந்தேகம் தற்போது உறுதியாகும் நிலை உருவாகி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போரில் கடந்த  4 மாதங்களாக தூண்டி விடும் வேலையை மட்டுமே செய்து வந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பானது தற்போது நேரடியாக களத்தில் இறங்குவதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளன.

கடந்த 4 நாட்களுக்கு முன் ஜி 7 நாடுகள் 3 நாள் உச்சி மாநாடு, அதனைத் தொடர்ந்து நேட்டோ உச்சி மாநாடு, பின்லாந்து மற்றும் ஸ்வீடனை உறுப்பினராகும் நடவடிக்கை  என்று மேற்குலகம் வேகம் காட்டத் தொடங்கியுள்ளன.

இரு அமைப்புகளின் உச்சி மாநாட்டின் நோக்கம் உக்ரைன் விவகாரம் மட்டுமே என்ற நிலையில். உக்ரைனுக்கு ஆதரவாக இருப்போம் என்று ஜி 7 அறிவிக்க, நேட்டோ அமைப்போ, ஒரு படி முன்னே சென்று, உறுப்பு நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தல் ரஷ்யாதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பு தொடங்கப்பட்டதே கம்யூனிச நாடுகளுக்கு எதிராகத்தான் என்றாலும் தற்போது ரஷ்யாவை முழு மூச்சுடன் எதிர்ப்பதை வெளிப்படையாகவே பிரகடனப்டுத்தியுள்ளது.

அதேபோல் மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினின் இலக்கு ஒட்டு மொத்த ஐரோப்பாதான் என்று கூறியுள்ளார். அதற்கு முன்பாக நவீன ஆயுதங்களை அதிகம் வழங்கியும் அனைவரும் ஒன்றிணைந்து ரஷ்யாவை அடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில் எதிர்வரும் நாட்களில் உக்ரைன் விவகாரம் உலகப் போராக மாறும் அபாயம் நெருங்கி வருகிறது என்பதையே மேற்குலகின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகிறது.