பெண்களே ஒன்றிணைவோம்.... இலங்கையில் கவன ஈர்ப்பு பேரணி!!

பெண்களே ஒன்றிணைவோம்.... இலங்கையில் கவன ஈர்ப்பு பேரணி!!

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை  கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மன்னாரில்   கவனயீர்ப்பு  பேரணி நடத்தியுள்ளனர் இலங்கை பெண்கள்.

நூறு கோடி மக்களின் எழுச்சி- 2023 பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நடைபெற்றது.

மன்னார்  மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டதோடு,மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் போன்றவற்றை நிறுத்தி உடல் உள ரீதியாக  பெண்களை பாதுகாக்க வேண்டும் என  மன்னார் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கவனயீர்ப்புப்  பேரணியில் கலந்து கொண்டார்கள்.

இதன் போது பெண்களால் பறை இசை ஒலிக்கப்பட்டு பெண்கள் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது.  மேலும் மன்னார் பிரதான நகர சுற்று வட்டத்தின் ஊடாக ஊர்வலமாக சென்று  பெண்ணியம் சார்ந்து வரையப்பட்டிருந்த சுவர் ஓவியங்களைப் பார்வையிட்டனர்.

அத்துடன் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம், வன்முறைகளில் இருந்து விடுதலை பெற சமூகங்களுக்காக ஒன்றிணைவோம்,  முதலாளித்துவத்தின் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என எழுச்சி கொள்வோம்,  பூமிக்கு எதிரான  வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர எழுச்சி கொள்வோம், எனும் தலைப்புகளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன

இதையும் படிக்க:    ட்விட்டரின் புதிய CEO.... வித்தியாசமான அற்புதமான CEOவை நியமித்த எலான் மஸ்க்....