உணவு நெருக்கடியை தீர்க்க உடனடி நடவடிக்கை தேவை- உலக வர்த்தக அமைப்பின் தலைவர் அறிவுறுத்தல்!!

உலகளாவிய உணவு நெருக்கடியை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.

உணவு நெருக்கடியை தீர்க்க உடனடி நடவடிக்கை தேவை- உலக வர்த்தக அமைப்பின் தலைவர் அறிவுறுத்தல்!!

உலக வர்த்தக அமைப்பின் 12-வது அமைச்சரவைக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றது.

இதில் தொடக்கவுரையாற்றிய அமைப்பின் தலைவர் கோஸி ஒகேஞ்சோ இவியாலா, உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரைவான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார்.
 
உலக அளவில் உணவு விலைகள் உயர பல காரணங்கள் இருந்தாலும் ரஷ்ய-உக்ரைன் மோதல் முக்கிய காரணமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலகளாவிய கோதுமை விலை 56 சதவீதமும் ஒட்டுமொத்த தானிய விலைகள் 30 சதவீதமும்  தாவர எண்ணெய் விலைகள் 45 சதவீதமும் அதிகரித்துள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும் மிக முக்கியமானவை என்று வலியுறுத்திய இவியாலா, விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பேரழிவு சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.