இங்கிலாந்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார் 3-ஆம் சார்லஸ்...!

இங்கிலாந்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார் 3-ஆம் சார்லஸ்...!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 3-ஆம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. 

இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, அவரின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். ஆனால், 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படும் அவருக்கு அதிகாரப்பூர்வமாக முடி சூட்டு விழா நடைபெறாமலேயே இருந்தது. 

இந்நிலையில், மே மாதம் 6-ந் தேதி 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அண்மையில் அறிவித்தது. அதன்படி, 70 ஆண்டுகளுக்கு பிறகு முடிசூட்டு விழா, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறிய ரக தங்க சாரட் வண்டியில் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் ஊர்வலமாக அரண்மனையில் இருந்து வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

அப்போது 3-ஆம் சார்லசின் முடிசூட்டு விழா பாரம்பரிய முறைப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. அரச மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட சார்லஸ், மன்னராக முடிசூட்டிக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்திட்டார். பின்னர், தனது தந்தை முன் அமர்ந்து தனது விஸ்வாசத்தை உறுதி அளித்தார்.

இதையும் படிக்க : ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அரசு அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டதுடன், கிரீடமும் அவருக்கு சூட்டப்பட்டது. இதேபோல், கமீலாவுக்கும் கிரீடம் சூட்டப்பட்டு இங்கிலாந்து ராணியாக அவர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். விழாவின் போது நடைபெற்ற குதிரைப் படை மற்றும் ஆயுதப் படை வீரர்கள் உள்ளிட்டோரின் அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதன்பின்னர், மன்னரும், ராணியும் தங்க முலாம் பூசப்பட்ட சாரட் வண்டியில் மீண்டும் பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பினர். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தருமான ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷரா உடன் கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.

இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவையொட்டி, ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது.  இந்த விழாவுக்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.