தியாக தீபம் திலீபனின் நினைவு வாகனம் மீது தாக்குதல்!

திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேற வலியுறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த திலிபன் உண்ணாவிரம் மேற்கொண்டார். இந்த போராட்டத்தில் திலிபன் 1987 செப்டம்பர் 26 ஆம் நாள் உயிரிழந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவு அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15ம்  நாள்  பொத்துவில் பகுதியில் இருந்து நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது நேற்றைய தினம் மூதூர் - கட்டைபறிச்சான் பகுதியில் இருந்து ஆரம்பித்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ6 பிரதான வீதியூடாக பயணித்தபோது சர்தாபுர பகுதியில் வீதியில் கற்களைப் போட்டு வழிமறித்து குறித்த வாகனம் சில சிங்களவர்களினால் தாக்கப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் திலீபனின் நினைவு ஊர்தியானது திருகோணமலை நகருக்குள் உள்நுழையவிடாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இரண்டு பொலிஸ் ஜீப் உட்பட பஸ் ஒன்றுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா