கண்டெய்னருக்குள் 46 உடல்கள்...அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

கண்டெய்னருக்குள் 46 உடல்கள்...அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட டிரக்கில் குறைந்தது 46 பேர் இறந்து கிடந்தனர்.

நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர் பிழைத்தவர்கள் "தொடுவதற்கு சூடாக" இருந்தனர் என்றும் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கிமீ தொலைவில் உள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாகும்.

மனிதக் கடத்தல்காரர்கள், அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், ஆவணமில்லாமல் வரும் புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு செல்வதற்கு பெரும்பாலும் டிரக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஓட்டுனரால் கைவிடப்பட்ட இந்த வாகனத்தில் குளிரூட்டும் வசதி இல்லை என்றும், அதற்குள் குடிநீர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கோடை மாதங்களில் சான் அன்டோனியோவின் காலநிலை வெப்பமாக இருக்கும், கடந்த திங்களன்று அங்கு வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸை எட்டுகிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப சோர்வு மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் இரண்டு குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு இந்த சம்வத்தின் பின்னணியை விசாரித்து வருகிறது. மனிதக் கடத்தல்காரர்கள், அவர்கள் லாபம் ஈட்டுவதற்காக மக்களைச் சுரண்டி அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் இந்த மனித விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்காவில் குடியேற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாகும், அங்கு கடந்த மே மாதத்தில் மட்டும் 2,39,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது தடுத்து வைக்கப்பட்டுள்ளன்ர். இதில் பலர் மிகவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்து அங்கு வருகின்றனர்.

ஹொண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து எல்லையைக் கடந்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 17,30,000 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பித்து, அமெரிக்க எல்லையைத் தாண்டி வருவதற்கு புலம்பெயர்ந்தவர்களில் பலர்  மனித கடத்தல்காரர்களுக்கு பெரும் தொகையைச் செலுத்துகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், புலம்பெயர்ந்தோர் தங்கள் பயணத்தின் போது இறந்ததற்கு இதே போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதைப் போல எந்த ஒரு கொடிய நிகழ்வும் இது வரை நடைபெறவில்லை.

அமெரிக்காவிற்குள் நுழையும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் வலிமையானவை. சமீபத்திய நாட்களில் தான் சான் ஆண்டானியோ பகுதி வெப்ப அலையால் தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் பயணிக்கும் பகுதி எப்படிப்பட்டது, அதன் காலநிலை எவ்வாறு இருக்கும் போன்றவற்றை அறியாமல் தாங்கள் பிழைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் மக்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். 

- ஜோஸ்