விஜய் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவாங்க..! பெட்ரோல், டீசல் விலையுமா குறைப்பாங்க...?

விஜய் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவாங்க..!   பெட்ரோல், டீசல் விலையுமா குறைப்பாங்க...?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின்  49-வது பிறந்தநாளையொட்டி தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் சார்பாகவும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் ரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் கேக் வெட்டியும்  பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். இன்று பல்வேறு இடங்களில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். அதோடு, விதவிதமான ஆஃபர்களையும் அள்ளித்தந்துள்ளனர்.  

பழனி:  பிறந்த குழுந்தைகளுக்கு தங்க மோதிரம்...! 

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு  விஜய்  மக்கள் இயக்கம் இளைஞரணி சார்பில்   பழனி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் பிறந்த 4 குழந்தைகளுக்கு  'தங்க மோதிரங்கள்' வழங்கபட்ட சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 முன்னதாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. அதனை தொடர்ந்து. முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராசிபுரம்:  பெட்ரோல் டீசல் விலை - அதிரடி சலுகை...! 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.அதே பகுதியில் உள்ள பெருமாகவுண்டம்பாளையம்  விஜய் ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களை அத்தியாவசிய பொருளான பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிரடி விலை சலுகை குறைப்பு அறிவித்துள்ளனர். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50  மற்றும் டீசலுக்கு 3 ரூபாய் குறைத்து அதிரடி விலை சலுகையை அறிவித்துள்ளனர். 

இதனையறிந்த பொதுமக்கள் காலை முதலே பெட்ரோல் பங்கிற்கு குவிந்து பெட்ரோல் மற்றும் டீசல் அடித்து வருகின்றனர். பெட்ரோல் போட  வரும் வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சலுகையில் குறித்து வாடிக்கையாளர் இடையே எடுத்துரைத்தனர் தற்போது இன்று காலை முதல் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்ததாகவும்,500 லிட்டருக்கு மேல் பெட்ரோலும்,1800 லிட்டர் டீசலும் ஓடியதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள்  பேனர்கள் அமைத்தும், பாலபிஷேகம் செய்து வீண் செலவுகளை செய்து வரும் நிலையிலும்,  மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமாக அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல்,டீசலில் விலை குறைப்பு செய்து பொதுமக்களிடையே வெகுவாக பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை: மாணவ மாணவிகளுடன் கேக் கட்டிங்...!

ராணிப்பேட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் விஜய்யின் புகைப்படம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வாலாஜா வன்னிவேடு நரிக்குறவர் காலனி குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்,  அங்குள்ள நரிக்குறவர் மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். 

நெல்லை:  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொண்டாட்டம்..! 

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை வரவேற்கும் வகையில் நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டத்துடன் விஜய் பிறந்த நாளை கொண்டாடினர். 

செங்கல்பட்டு: இலவச ஆட்டோ சேவை...! 

செங்கல்பட்டு மாவட்டம் மாண்டூரில், விஜய் பிறந்த நாளை ஒட்டி, 20 ஆட்டோக்கள் இலவச சேவை வழங்கினார். மாண்டூரில் இருந்து செங்கல்பட்டிற்கும், செங்கல்பட்டில் இருந்து மாண்டூருக்கும் இலவச ஆட்டோ சேவை வழங்கினர். அத்துடன் பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 
திருவள்ளூர்: முதியோர்களுக்கு அருசுவை உணவு..! 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முதியோர் காப்பகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டி, நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடினர். அத்துடன் அங்குள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அருசுவை உணவு வழங்கினர். இதனால் அங்குள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும்  கொண்டாடினர். 

புதுச்சேரி:  முதலமைச்சர் போஸ்டர், நடுக்கடலில் பேனர்..! 

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடினர். புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே தமிழக முதலமைச்சர் என்றும், 2026-ல் 'சேனாதிபதி சந்திரசேகர் விஜய் எனும் நான்' என்றும், வா தலைவா வா உனக்காக காத்திருக்கு ஜார்ஜ்கோட்டை என்ற வசனங்கள் எழுதப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக முதல்வர் என பல்வேறு இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம் உள்ள நடுக்கடலில் விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறி  பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க     | பிறந்தநாளில் வெளியான லியோ-வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...கொண்டாடும் ரசிகர்கள்!