தேவதைகளாக மாறிய பெண் காவலர்கள்: நெகிழ வைத்த நிகழ்வு!

தேவதைகளாக மாறிய பெண் காவலர்கள்: நெகிழ வைத்த நிகழ்வு!

வேலூர்: புகார் அளிக்க வந்த மூதாட்டியின் நிலைமையை கண்டு இறக்கமுற்று, காண்பவர்கள் பாராட்டும் அளவிற்கு உதவியுள்ளனர் காவலர்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். 70 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டில் இருந்து பொருட்கள் திருடு போவதாக கூறி குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில் தன் புகார் என்ன நிலையில் உள்ளது என தெரிந்து கொள்வதற்காக கடந்த 16-ம் தேதியன்று சென்றார். அப்போது கிழிந்த ஆடையுடன் வந்த கண்ணம்மாவைப் பார்த்த காவலர்கள் உட்கார வைத்து பேசினர். 

அப்போது, தான், வசதியின்றி அவதிப்படுவதாக கண்ணீர் தோய்ந்த முகத்துடன் பேசிய மூதாட்டி, தாகமாக இருப்பதாக கூறி தண்ணீர் கேட்டார். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் லட்சுமி, தண்ணீர் அளித்ததோடு, மூதாட்டியின் கிழிந்த ஆடையைப் பார்த்து இரக்கமுற்றார்.

உடனே அருகில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்று மூன்று புடவைகள், மூன்று ஜாக்கெட்டுகளை வாங்கி அதனை மூதாட்டியிடம் கொடுத்ததோடு உணவு மற்றும் கையில் பணத்தையும் கொடுத்தார்.

புகார் அளிக்க சென்ற இடத்தில் போலீசார் தன்னை பெற்ற தாயைப் போல உபசரித்ததை பார்த்த கண்ணம்மா, அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். 

ஆங்காங்கே, சில காவலர்கள், பொதுமக்களிடம் சரியான அணுகுமுறையை பின்பற்றாமல், செயல்பட்டாலும், சில இடங்களில், இது போன்ற நல்ல உள்ளம் படைத்த காவலர்கள், எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என முன்வருவது பாராட்டுக்குரியது. இந்த வயதான பெண்மணிக்கு உதவிய பெண் காவலர், நம் கண்ணுக்கு தேவதையாக தெரிவதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: குரங்குகளுக்கு ஈமச் சடங்கு செய்த ஊர்மக்கள்!