ட்விட்டரில் பறக்கும் ஒற்றை வார்த்தை ட்வீட்ஸ்...!

ட்விட்டரில் பறக்கும் ஒற்றை வார்த்தை ட்வீட்ஸ்...!

பொதுவாகவே ட்விட்டரில் ஒவ்வொரு நாளும், உலகில் நடக்கும் முக்கிய  நிகழ்வுகள் ட்ரெண்டாவது வழக்கம். பல நேரங்களில் ஒரு சில நிகழ்வுகள் எதற்காக ட்ரெண்டாகிறது என்று தெரியாமலேயே ட்ரெண்டிங்கில் இருக்கும். பெரும்பாலும், நடனங்கள், வைரல் வீடியோக்கள் ட்ரெண்டாகும். ஆனால் சில தினங்களாக ஒற்றை வார்த்தை பதிவு ட்விட்டரில் படு ட்ரெண்டாகி வருகிறது. 

அமெரிக்கா மற்றும் கனடாவின் பெரும்பகுதிக்கு ரயில் சேவை வழங்கும்  ஒரு பிரம்மாண்டமான தனியார் இரயில் நிறுவனமான 
ஆம்ட்ராக் வெள்ளிக்கிழமையன்று, ஒரு ட்வீட்டில்  "ரயில்கள்" என்று அதன் பிராண்ட் விளக்கத்தை சுருக்கமாகக் கூறியுள்ளது. இந்த ஒற்றை வார்த்தை பதிவு, 1.3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று சர்வதேச ட்ரெண்டானது. அதனை தொடர்ந்து நாசா நிறுவனம், " யூனிவெர்ஸ் " என ஒற்றை வார்த்தையை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதே போல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் " டெமோகிராசி " அதாவது ' ஜனநாயகம்' என பதிவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜான் கரமெண்டி, ஒரு காங்கிரஸ்காரராக அவரது பங்கை " காங்கிரஸ் " என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் " கிரிக்கெட் " என பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார்.  

இந்த சர்வதேச ட்ரெண்டிங் வரிசையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தனி நபர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், " திராவிடம் " என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, 5415 ரீடிவீட்களும், 22 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், " எடப்படியார் " என பதிவிடப்பட்டிருந்தது. அதிமுக செயற்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் வகையில், இவ்வாறு பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாடு" என பதிவிட்டுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் "சமூக நிதி" என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "தமிழ்த்தேசியம்" என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை " தமிழன் " என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், " மக்கள் " என்றும், மக்களவை உறுப்பினர் கனிமொழி, " பெரியார் " என்றும் பதிவிட்டுள்ளனர்.
இந்த வரிசையில், பலரும் இணைந்து வருகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க, வழக்கம் போல் சினிமா ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயர்களை, அதாவது அஜித், விஜய் என போட்டு அவர்களது ட்விட்டர் பதிவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.