கொரோனா நிவாரணத்தொகை பெற்ற போது 'பொக்கைவாய் சிரிப்பால்' வைரலான ' வேலம்மாள்' பாட்டி காலமானார்..!

கொரோனா நிவாரணத்தொகை பெற்ற போது 'பொக்கைவாய் சிரிப்பால்'   வைரலான ' வேலம்மாள்'  பாட்டி காலமானார்..!

தமிழக அரசின் கொரோனா கால நிவாரணத்தொகை பெற்ற போது, தனது பொக்கைவாய் சிரிப்பால் பிரபலமான 92 வயது வேலம்மாள் பாட்டி வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.

கடந்த 2021 ஜூன் மாதம் கொரோன தொற்று பரவல் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிய நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ரூ.2,000 நிவாரணத் தொகையும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலுங்கடி பகுதியை சேர்ந்த வேலம்மாள் என்ற மூதாட்டியும் இந்த தொகுப்பையும் உதவித் தொகையையும் பெற்றார்.

நிவாரணத்தொகையை பெற்று கொண்ட வேலம்மாள் பாட்டி சிரித்தபடி இருந்த புகைப்படம் அப்போது இணையத்தில் வைரலானது.

அந்த படத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அப்போது தனது ட்விட்டரில் பகிர்ந்து, "ஏழையின் சிரிப்பு, நமது அரசின் சிறப்பு" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அரசின் பல்வேறு நலத்திட்ட விளம்பரங்களிலும் பொக்கைவாய் சிரிப்புடன் இருக்கும் வேலம்மாள் பாட்டியின் புகைப்படம் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிட்சை பெற்று வந்த வேலம்மாள் பாட்டி வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 92. 

இந்நிலையில் வேலம்மாள் பாட்டியின் மறைவு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வேலம்மாள் பாட்டியின் மறைவிற்கு நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையும்  படிக்க    | ஆந்திரா கடற்கரையில் கரை ஒதுங்கிய 25 அடி நீள ராட்சத் நீலத்திமிங்கலம் ...!