இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்க கோவில் கட்டிய ஓய்வு பெற்ற ஆசிரியர்!!!

கேரளாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வணங்க ஒரு கோவிலைக் கட்டி அங்கு மகாத்மா காந்தி, பி. ஆர் அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் போட்டோக்களை வைத்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்க கோவில் கட்டிய ஓய்வு பெற்ற ஆசிரியர்!!!

பல வகையான கோவில்களைக் கண்டிருப்போம். புது புது வகையான கடவுள்களைக் கேள்விப் பட்டிருப்போம். உயிரோடு இருக்கும் சில பிரபலங்களுக்குக் கூட இங்கு நம் நாட்டில் கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான கோவில் கட்டி, அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.

ஒய்வுப் பெற்ற சமூக அறிவியல் ஆசிரியரான சிவதாசன் பிள்ளை என்பவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வணங்க மூன்று செண்டுகளுக்கு கோவில் ஒன்று கட்டி இருக்கிறார். (1 செண்ட்- 436 சதுடி). பரணகடனா க்ஷேத்திரம் என பெயரிடப்பட்டுள்ள அந்த கோவிலில், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் அரசியலமைப்பின் முகவுரை கோவிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.

71 வயதான சிவதாஸ் பிள்ளை, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். ஒரு வருடத்திற்கு முன்பு, கொடபனகுன்னு என்ற பகுதியில் இவர் கட்டிய, இந்த வித்தியாசமான கோவிலில், முக்கிய தெய்வமாக இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகமும், அதற்காக எப்போதும் ஒளிரும் எண்ணெய் விளக்கும் கொண்டு, பொதுவான இந்திய கோவில் போலவே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பானமையாக மாணவர்களாக இருக்கின்றனர். வருபவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. மேலும், அங்கு கர்பகிரகத்தில், “அரசியலமைப்பு சட்டம் தான் கடவுள், அது தான் இந்த இல்லத்தின் சொத்து” என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய சிவதாசன் பிள்ளை, “இன்றைய தலைமுறையினருக்கு, நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. சுதந்திர தினம், குடியரசு தினம் தவிற வேறு எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், இந்திய அரசியலமைப்பின் உணர்வை அவர்களுக்குள் புகுத்தி அவர்களுக்கு அதிகாரம், அளிப்பதுதான் என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கான காரணம். குறிப்பாக, நாம் கடவுளை முன்னிருத்தினால் இங்கு எந்த பிரச்சனைகளும் நடக்காது எனத் தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்” என்று கூறி, தனது கோவில் கண்டு பெருமிதம் கொள்கிறார். அடிக்கடி குழந்தைகளுக்கு அரசியலமைப்பின் முக்கியத்துவத்தையும் முக்கிய அம்சங்களையும் விளக்கும் இவர், அரசியலமைப்பைப் படித்து அவர்களுக்கு எளிமையான சொற்களில் விளக்குகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணி புரிந்த சிவதாசனின் இந்த முயற்சியை, அவரது மாணவர்கள் பாராட்டி வருவதோடு, இது குறித்து, சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

சமீபத்தில் அரசியலமைப்பை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கேரள கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் தனது வேலையை இழந்த நேரத்தில் இவரது கதை பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பை கண்டித்து, "இது தொழிலாள வர்க்கத்தை கொள்ளையடிக்கும் கருவியாக குறைக்கப்பட்டது" என்ற முன்னாள் அமைச்சர் சாஜி செரியன், அரசியல் சாசனத்தை அவமதித்ததாக கூறி, தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் மீது, பல காவல் நிலையங்களில் 9 புகார்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.