இழப்பு வீட்டில் இளிப்பா? ஏளனமாக கேள்வி கேட்ட நெட்டிசன்கள்!

இறுதி சடங்கில், குடும்பம் முழுவதும், சடலத்தின் முன் சிரித்த படி போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இழப்பு வீட்டில் இளிப்பா? ஏளனமாக கேள்வி கேட்ட நெட்டிசன்கள்!

பொதுவாக ஒருவர் இறந்தால் அந்த இடத்தில் நாம் சோகமாகவும், அழுகையுடனும் தான் அனைவரும் இருக்க வேண்டும் என நினைப்போம். அது தான் உலக வழக்கமும். ஏன் என்றால், இழப்பு என்பது மிகப்பெரிய வலி. அதனை நம்மால் மாற்றவும் முடியாது மறக்கவும் முடியாது. இறந்தவர்களின் ஆத்மாவை வழி அனுப்ப, அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த நல்லவற்றையெல்லாம் சொல்லி, அவர்களை இழந்த வலியை நாம் அழுது தீர்த்துக் கொள்வோம். ஆனால், தற்போது, இணையத்தில் ஒரு போட்டொ படு பயங்கரமாக பகிரப்பட்டு படு வைரலாகி வருகிறது. நல்ல விதத்தில் அல்ல, மோசமான விதத்தில்!

கேரளாவில், ஒரு குடும்பத்தில், 95 வயதான மூதாட்டி இறந்து விட்டார். அவரது சவப்பெட்டிக்கு முன், அவரது குடும்பம் முழுவதும் நின்று, சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். மேலும், அந்த போட்டோவை, சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோ, பயங்கரமாக பகிரப்பட்டு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சுமார் 40 பேர் அடங்கிய அந்த போட்டோவை குடும்ப உறுப்பினர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் பயங்கரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்போது இணையவாசிகளுக்கு இடையே பெரும் பேசுபொருளாகி, பெரும் விவாதமாகியுள்ளது.

95 வயதான மாரியம்மா வர்கீஸ் பனவெளில் (Mariyamma Varghese Panavelil) என்பவர், கேரளாவின் மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இயற்கையாக உயிரிழந்த அவரது இறுதி சடங்கிற்கு அவரது குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர், பல வருடங்கள் கழித்து இணைந்துள்ளனர். இறந்த மாரியம்மாவிற்கு, 9 குழந்தைகள். அவர்களில் 8 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். பல வருடங்கள் கழித்து அனைவரும் ஒன்று கூடியது இங்கு தான் என்பதால், இறந்த மாரியம்மாவின் உடல் முன்பு அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி போஸ் கொடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை 2.15 மணிக்கு இந்த போட்டோ எடுக்கப்பட்டது. அந்த போட்டோவை திட்டமிட்டு எடுக்கப்பட வில்லை என குடும்பத்தினர் கூறிய நிலையில், இந்த போட்டோ இணையவாசிகள் இடையில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஒரு வருடமாக உடல் நலம் சரியில்லாமல் படுத்த படியாக இருந்த மாரியம்மாள் நிம்மதியாக உயிரிழந்தார் என அவரது உறவினர் கூறினார். இதனைத் தொடர்ந்து, சோசியல் மீடியாக்களில் நேட்டிசன்கள், ‘ஒரு இறந்தவர் சடலத்தின் முன், சோகமாக இல்லை என்றாலும் பரவாயில்லை, ஏன் இப்படி சிரித்தபடி இருக்கின்றனர்?’ என கமெண்ட் செய்து சரமாறியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அவர் குடும்பத்தினரோ, “நாங்கள் அவரை (மாரியம்மாள்) எவ்வளவு பாசமாக பார்த்துக் கொண்டோம் என எங்களுக்கு தெரியும். அவர் இறந்தாலும், அவரது இறுதி தருணங்களில் அவரை சந்தோஷமாக வழியனுப்ப வேண்டும் என நாங்கள் நினைத்தது எங்களுக்கு தவறாக தெரியவில்லை” என கூறுகின்றனர்.

ஒரு பக்கம், பலரால் இது பெரும் சர்ச்சைப் பொருளாக்கப்பட்டாலும், ஒரு சிலர் இவர்களைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். மலையாள எழுத்தாளர் எஸ் சாரதாகுட்டி என்பவர், இந்த போட்டோவை பகிர்ந்து, இதனை ஆதரிக்கும் வகையில் பதிவிட்டார். இது குறித்து பேசிய அவர், “இறந்த மாரியம்மாளும், அவரது குடும்பத்தினரின் மகிழ்ச்சியையே எதிர்பார்த்திருப்பார். இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பார்த்து அவரது ஆத்மாவும் சாந்தியடையும்” என கூரினார்.

அது மட்டுமின்றி, இந்த போட்டோவானது பெருமளவில் பகிரப்பட்டு, கேரள பொதுக்கல்வித்துறை அமைச்சர் வி சிவன்குட்டி, இது குறித்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த போட்டோவை, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, அதில், “இறப்பு வலியைத் தரும். ஆனால், அது விடைபெறுதலும் கூட. வாழ்க்கையைத் திருப்தியாக வாழ்ந்தவரை, சிரித்த முகத்துடன் வழியனுப்புவதை விட சிறந்தது என்ன? இந்த புகைப்படத்திற்கு தவறாக கமெண்ட் செய்ய வேண்டாம்!!!” என்று எழுதி பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.