90ஸ் கிட்ஸ் -ன் உள்ளக்குமுறலை அப்படியே அச்சடித்து போஸ்டராக ஒட்டிய இளைஞர்கள்...! " விஷயம் என்னன்னா..."

90ஸ் கிட்ஸ் -ன் உள்ளக்குமுறலை அப்படியே அச்சடித்து  போஸ்டராக ஒட்டிய இளைஞர்கள்...!  " விஷயம் என்னன்னா..."

குமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு நன்றி அறிவித்து ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் படித்து முடித்து விட்டு திருமண வரன்களை பார்த்து வருகின்றனர். இவ்வாறு வரன் பார்க்கும் இளைஞர்களுக்கு எத்தனை பெண்களை பார்த்தாலும் திருமணம் தடை பட்டுக் கொண்டே இருந்தது.  ஏனெனில், வரன் பார்க்கும் இளைஞர்கள் குறித்து பெண் வீட்டார் ஊரில் வந்து விசாரிக்கும் போது ஒரு சிலர் அந்த இளைஞர்களை குறித்து தவறுதலாக தகவல்களை கூறி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் வரும் வரன்கள் அனைத்தும் தடைபட்டு போகின்றன.  இதனால் மன வருத்தத்திற்கு ஆளான மேலச்சுண்டன்விளை பகுதி இளைஞர்கள் , தங்களை தேடி வரும் பெண் வீட்டாரிடம் ஊர் மக்கள் சிலர் பொய்யாக தகவல் பரப்பி கல்யாணத்தை கெடுத்து விடுகிறார்களோ என எண்ணினர்.  

எனவே, அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தனர். அதன்படி ஊர் மக்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக போஸ்டரை தயார் செய்தனர் இளைஞர்கள். தங்களுக்கு வரும் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் தொழில் செய்யும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊரின் மையப்பகுதியில் உள்ள மதில் சுவர் ஒன்றின் மீது பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

அதாவது, " ஒரு சில நபர்களின் திருமண வரன்களை மட்டும் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என வஞ்சப்புகழ்ச்சியிலான வார்த்தைகள் அதில் இடம் பெற்றிருந்தது.  மேலும் இதே பணியை தொடர்வீர்கள் என்றால் தங்களது பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய நன்றி அறிவிப்பு பிளக்ஸ் ஒட்டப்படும் இப்படிக்கு ' பாதிக்கப்பட்டவர் '  என்று எச்சரிக்கையும் பதிவு செய்துள்ளனர். 

இதே போன்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

90ஸ் கிட்ஸ்கள் பலருக்குமே பெண் கிடைப்பதே அரிதாக பார்க்கப்படும் நிலையில், அந்த திருமணத்தை தடுக்கும் அக்கம்பக்கத்தினருக்கே எச்சரிக்கையாய் அமைந்த இந்த பாணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் கையாளலாமா என முணுமுணுக்கின்றனர் இளைஞர்கள்.

இதையும்  படிக்க     | பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?