கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா..!

கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு கண்தானம் செய்த குடும்பத்திற்கு பாராட்டு சான்று வழங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் விழா மேடையிலேயே தனது கண்களையும்  தானம் செய்தார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகிவற்றின் சார்பில், கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2015 -ம் ஆண்டு முதல் தற்போது வரை கண்தானம் செய்த 389 குடும்பத்தினர் மற்றும் கருவிழி தானம் செய்த 191 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். 

அதே விழா மேடையில் ஆட்சியர், கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிம்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது கண்களையும் தானம் செய்வதாவதாக கூறி, அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். இந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், ஆட்சியருக்கு பாராட்டும் குவிந்தது. இந்த நிகழ்வில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் சுப்பிரமணியன், மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.