சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு பணிகள் தீவிரம்.. முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு பணிகளை மேற்கொண்டு வருவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு பணிகள் தீவிரம்.. முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், ஆழ்வார்பேட்டை, சீத்தம்மாள் சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே. என் நேரு, அமைச்சர் பொன்முடி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன் தீப் சிங் பேடி உடனிருந்தனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், நேற்று இரவு சென்னை மாநகராட்சி கட்டுபாட்டு அறையை பார்வையிட்டதாகவும், தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தண்ணீர் பிரச்னைக்கு இன்று மாலைக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர், முந்தைய அரசு 10 ஆண்டுகளாக குட்டிச் சுவராக்கி வைத்து இருப்பதாக சாடினார். மேலும், இனிவரும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.