"நூற்பாலைகளின் கோரிக்கையை பரிசீலித்திடுக" வைகோ அறிக்கை!

"நூற்பாலைகளின் கோரிக்கையை பரிசீலித்திடுக" வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "பஞ்சு விலை உயர்வு காரணமாக நூற்பாலைகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல் மற்றும் மின் கட்டணம், ஜிஎஸ்டி போன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமலும் தத்தளிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 700  சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், 100 கோடி ரூபாய் வரையில் வருவாய்  இழப்பு ஏற்படும் என்று சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். எனவே ஒன்றிய அரசு, பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கிக் கடன் வட்டி விகிதங்களை பழைய நிலைக்கு அதாவது 7.5 விழுக்காடு அளவுக்கு குறைக்க வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு முன் வைத்திருக்கிறது. இதனைப் பரிசீலனை செய்து, நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும் என்று வலியுரித்துள்ளார்.

இதையும் படிக்க || இன்று முதல் புதிய அட்டவணையில் இயங்கும் புற நகர் ரயில்கள்!!