திருச்சியில் புத்தகத் திருவிழா!

திருச்சியில் புத்தகத் திருவிழா!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் இன்று செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வரும் 25 ஆம் தேதி திருச்சி புத்தக திருவிழா என்கிற பெயரில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

 அறிவுசார் உலகம்

 அந்த "திருச்சி புத்தகத் திருவிழாவினை" நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தனர்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், அப்துல் சமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறிவுசார் உலகை அமைக்க வேண்டும் என்கிற கருத்தை கொண்டது தான் திராவிட மாடல். அதுக்காக தான் இது போன்ற புத்தக திருவிழா. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

 நாம் புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். புத்தக திருவிழாவிற்கு குடும்பம் குடும்பமாக வர வேண்டும். படிப்பு என்பது முக்கியம் தான் அதே போல புத்தகங்கள் வாசிப்பதும் முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

 அண்ணா படித்துக் கொண்டே இருந்தார்

 தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, அண்ணா எம்.ஏ படித்து முடித்த பிறகு பெரும்பாலான நாட்கள் அவர் கன்னிமாரா நூலகத்தில் தான் இருந்தார். புத்தகங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை சொற்போரில் வெல்ல முடியாது. "தலைப்பு இல்லை" என்கிற தலைப்பில் பேச வேண்டும் என அண்ணாவிடம் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் கடைசி நேரத்தில் கூறிய போதும் 3 மணி நேரம் அண்ணா பேசினார். அண்ணா சிறப்பாக பேசியதற்கு காரணம் தொடர்ந்து நூல்கள் வாசித்தது தான்.

முதன் முறையாக அண்ணா பாராளுமன்றத்தில் பேசும் போது அவருக்கு 5 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் பேச்சை கேட்டு விட்டு பிரதமர் நேரு அவருக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். அதன் பின்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். நான் திராவிட நிலப்பரப்பில் இருந்து வந்துள்ளேன் என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார்.