கொரோனா பொருட்களுக்கு ஜிஎஸ்டி போடுவது மனித தன்மையில்லை.. ரவுண்டுகட்டி வெளுக்கும் பிடிஆர்!!

கொரோனா பொருட்களுக்கு ஜிஎஸ்டி போடுவது மனித தன்மையில்லை.. ரவுண்டுகட்டி வெளுக்கும் பிடிஆர்!!

பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி, மற்றும் மருத்துவ உபகரணத்துக்கு வரி பெற்று தான் அரசு பிழைக்க வேண்டும் என்றால் அது திறமையில்லாத அரசு என தமிழக நிதியமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தலைமையில், 43 வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் சார்பில் கொரோனா மருந்துகள் , தடுப்பூசி, மற்றும் மருத்துவ உபகரணம் மீது வரி விலக்கு அல்லது வரி குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் வருமானம் குறைந்துவிடும் என காரணம் கூறி மத்திய அரசு அதற்கு சம்மதிக்கவில்லை என கூறினார். 

வரி விலக்கு அளித்தால் அல்லது குறைத்தால் எவ்வளவு இழப்பு வரும் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் உரிய பதில் இல்லை என கூறிய அமைச்சர்,பேரிடர் காலத்தில் கொரோனா மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், மற்றும் மருத்துவ உபகரணத்துக்கு வரி பெற்று தான் அரசு பிழைக்க வேண்டும் என்றால் அது திறமையில்லாத அரசு என்றும் கொரோனா பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி போடுவது மனிதத்தன்மை அற்ற செயல் என்றும் மத்திய அரசை விமர்சித்தார்.  

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கவே கடன் வாங்க வேண்டியுள்ள சூழலில் மத்திய அரசு உள்ளதாக கூறிய அமைச்சர், மத்திய அரசு பெறும் கடன் குறுகிய கால கடனாக இல்லாமல் நீண்ட நாட்களுக்கான கடனாக  இருக்கும்பட்சத்தில், மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளதாக கூறினார். 

கடந்த ஆட்சியின் தவறான அணுகுமுறையால் தமிழகத்தின் வரி வருமானம் குறைந்துவிட்டதாக கூறிய அவர், உரிய முறையில் வரி வருமானம் வந்திருந்தால் கொரோனா நிவாரணம் அதிக அளவில் கொடுத்திருக்க முடியும் என கூறினார். 

வரி வருமானத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் அளிக்கும் அறிவுரையின்படி நாங்கள் செயல்படுவோம் என உறுதியளித்தார்.