ராஜராஜ சோழன் சதய விழா: 1038  கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி!

மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 38 ஆம் ஆண்டு சதய விழவை முன்னிட்டு ஆயிரத்து 3  கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான சதயவிழா, தஞ்சை பெருவுடையார் கோயிலில், மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக களிமேடு அப்பர் பேரவையின் சார்பில் ஓதுவார்கள் திருமுறை இசைத்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவைக் காண, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனா். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனா். 

சதய விழாவை முன்னிட்டு பெரியக் கோயில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன், ராஜராஜன் நுழைவு வாயில்கள், கோயில் உள் பிரகாரம், வெளிப் பிரகாரம், கோட்டை மதில்சுவர் ஆகியவை மின்னொளியில் மிளிர்கின்றன.

ராஜராஜ சோழன் சிலை, அரசு மருத்துவமனை சாலை, பெரிய கோயில் சாலை ஆகிய இடங்கள் மின் விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதனையொட்டி ராஜராஜ சோழனுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆயிரத்து 38 நடன கலைஞர்கள் பெரிய கோயில் வளாகத்தில் நந்தி சிலை அருகே ஒன்றிணைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினா்.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடன கலைஞர்கள், நடன பள்ளி மாணவர்கள் பங்கேற்று நடனமாடினா். இதனை பொதுமக்கள் மெய்மறந்து ரசித்து பாா்த்தனா்.

சதய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.