அதிமுக தொண்டர்கள் முடிவெடுத்தால்…செல்லூர் ராஜூ அதிரடி!

அதிமுக தொண்டர்கள் முடிவெடுத்தால்…செல்லூர் ராஜூ அதிரடி!

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை மேற்கு தொகுதியின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு வழங்கினார்.

முதன்மையான கோரிக்கைகள்

அதில் மாநகராட்சி 82, 83 வார்டுகளில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் 973 குடும்பங்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளான விராட்டிப்பத்து, பொன்மேனி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 63, 65 வார்டுகளில் தாழ்வாக செல்லக்கூடிய உயர் மின் கம்பிகளை அகற்ற வேண்டும், தொகுதிக்குள் அரசு இருபாலர் கல்லூரி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே. ராஜு கூறுகையில், மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எவ்வளவு மனுக்கள் கொடுத்தாலும் நிறைவேற்றுவதில்லை. தற்போது முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 10 கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளேன்.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தலா 1 இலட்சம் வரை பயன் அடைந்து வந்தனர். புதுமைப் பெண் திட்டத்தால் ஒருவருக்கு 36,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். எந்த திட்டம் சிறந்த திட்டம் எனபதை மக்களே முடிவு செய்ய வேண்டும், எந்தவொரு குளறுபடியும் இல்லாமல் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்,

எடப்பாடி தான் தலைமை

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டு வரும் திட்டங்கள் அறிவிப்போடும், விளம்பரத்தோடும் நிற்கிறது, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிவிப்பால் பலர் நகைகளை இழந்து உள்ளனர், 48 இலட்சம் பயன் அடைய கூடிய நகைக்கடன் தள்ளுபடியில் 13 இலட்சம் பேர் மட்டுமே பயன் அடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது, எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது, தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என அடித்து சொல்கிறேன், மாற்று கருத்து ஏதுமின்றி சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர ஆவார்" என கூறினார்