பள்ளி மாணவி மர்ம மரணம்...நான்கு நாட்களாக போராடும் பெற்றோர்!

பள்ளி மாணவி மர்ம மரணம்...நான்கு நாட்களாக போராடும் பெற்றோர்!

கள்ளக்குறிச்சியில் மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் உறவினர்கள் நான்காவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர்கள் மாணவி உயிரிழந்த நாளன்று ஐந்து முறை சாலை மறியல் செய்தனர் அதன் பின்பு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்பு மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனை நடைபெற்றது பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று திடீரென கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஜய பிரபாகரன் ஆகியோர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட மறுத்து கொட்டும் மழையில் சாலை மறியல் செய்து வருகின்றனர் இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.