மதிய உணவருந்த வீட்டிற்கு சென்ற மாணவர்... ரயில் மோதி உயிரிழப்பு!

மதிய உணவருந்த வீட்டிற்கு சென்ற மாணவர்... ரயில் மோதி உயிரிழப்பு!

தஞ்சாவூர் அருகே மத்திய உணவருந்த பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்ற மாணவர் எதிர்பாராத விதமாகா ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை கஞ்சான் மேட்டு தெருவை சேர்ந்த சிவா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் ஆவணியாபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளியில் மத்திய உணவு இடைவெளியில், வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவது வழக்கம். அதே போல், நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக பள்ளியில் இருந்து வந்த சிவா, அருகிலுள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்று உள்ளார்.

அப்போது, கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் மோதி அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆடுதுறை அருகே, ரயில் மோதி மாணவன் உயிரிழந்ததால் டிரைவர் ரயிலை நிறுத்தி தகவல் தெரிவித்தார். அதே நேரம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நரசிங்கம்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் அரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.