தூண்டில் வளைவு அமைக்கும் பணி... இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்!

தூண்டில் வளைவு அமைக்கும் பணி... இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்!

சென்னை எண்ணூரில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியால் இருவேறு மீனவ கிராம மக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர் அடுத்த தாழங்குப்பம் - நெட்டுக்குப்பம் கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவ மக்களின் கோரிக்கையை அடுத்து படகுகள் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாழங்குப்பம் கடல் பரப்பில் மட்டும் தூண்டில் வளைவு அமைக்கப்படுவதாகக் கூறி, நெட்டுக்குப்பம் மீனவ மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, தங்கள் பகுதியிலும் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி போராட்டத்தில் இறங்கிய நெட்டுக்குப்பம் மீனவர்களுக்கும், தாழங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

வாக்குவாதம் முற்றி, கையில் கம்பு மற்றும் கட்டைகளுடன் மீனவர்கள் ஒன்று திரண்டதை அடுத்து மோதலை தடுக்கும் வண்ணம் ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடிய நிலையில், இரண்டு கிராம மக்களிடையே காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தாழங்குப்பம் மற்றும் நெட்டுக்குப்பம் மீனவ கிராமங்கள் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கும் நிலையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.