காணாமல் போனவர்களை ஹெலிகாப்டரில் தேடுங்கள்...மக்கள் கோரிக்கை!

காணாமல் போனவர்களை ஹெலிகாப்டரில் தேடுங்கள்...மக்கள் கோரிக்கை!

பலத்த காற்று வீசியதில்  மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளனர்.

மீனவர்களைக் காணவில்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமைநகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வரும்போது காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் அமலிநகரை சேர்ந்த அஸ்வின்,  பிரசாத் என  இரண்டு மீனவர்களை காணவில்லை. நேற்று மாலை முதல்  மீனவர்களை தேடி அப்பகுதி மீனவர்கள் படகுகளில் சென்று தேடி வரக்கூடிய நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஹெலிகாப்டரில் தேட மக்கள் கோரிக்கை

இரண்டாவது நாளாக இன்று இதுவரை மாவட்ட நிர்வாகமும்,  மீன்வளத் துறையும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் அமலிநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலுக்கு மீன்பிடிக்க சென்றதில் மாயமான  திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மீனவர் கிராமமான அமலிநகர் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் தினசரி நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நேற்று மீன்பிடி தொழிலுக்கு சென்ற படகுகள் கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின்(32), பிரசாத்(40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர்.

இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 15 படகில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் நேற்று மாலையில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான அஸ்வினுக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரசாந்திற்கு ஸ்டெபிலா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஹெலிகாப்டர், கடற்படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.