குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்...குறைந்து விலைக்கு வாங்குகிறார்களா வியாபாரிகள்?

தகவல் பெற்ற வியாபாரிகள் சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து மிககுறைவான விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். 

குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்...குறைந்து விலைக்கு வாங்குகிறார்களா வியாபாரிகள்?

தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில் விவசாயிகளது நெல்லை அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாத நிலையால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

கொள்முதல் செய்யாமல் புறக்கணிப்பா?

குறிப்பாக நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பட்டு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும்  அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யும் வகையில் கொண்டுவந்து குவித்துள்ளனர்.

ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் நெல்லின் ஈரப்பதம், சாக்கு இன்மை, கிடங்கு வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர்.  இதனால் கீழப்பட்டு, இராயபுரம் அரசு கொள்முதல் நிலையத்தில் 5000 முதல் 6000 வரையிலான நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக தங்களது நெல்லை பாதுகாத்து வருகின்றனர். 

வியாபாரிகளுக்கு அதிகாரிகள் உடந்தையா

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளின் நிலைகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவான வியாபாரிகளுக்கு தகவல்கொடுத்து அதன்மூலம் தினசரி வியாபாரிகளிடம் இருந்து பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று வருகின்றனர்.  தகவல் பெற்ற வியாபாரிகள் சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து மிககுறைவான விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். 

வெளிமாநில வியாபாரிகளே கொள்முதல்

விவசாயிகளும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்துகிடந்து மழையிலும், வெய்யிலும் நெல்லை பாதுகாக்க முடியாமல் வந்தவிலைக்கு வியாபாரிகளிடம்  நெல்லை விற்று கடும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளின் நிலையால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் விவசாயிகளுடன் சென்று கீழப்பட்டு, ராயபுரம் ஆகிய அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், நெல்கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசை குற்றம்சாட்டி விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், தற்போது பருவம் தவறி மழை பெய்துவரும் நிலையால் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும், அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வெளிமாநில வியாபாரிகளே நெல்லை கொள்முதல் செய்வது விவசாயிகளை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது எனவும், மேலும் உணவுத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இரண்டு கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருப்பது  வேதனை அளிக்கும் செயல் எனவும் குற்றம்சாட்டினார்.