பருவ மழைக்கு முன் ஆரணியாற்று கரைகள் சீரமைக்கப்படுமா?

பருவ மழைக்கு முன் ஆரணியாற்று கரைகள் சீரமைக்கப்படுமா?

இன்னும் இரண்டு மாதங்களில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த கரைகள் சீரமைக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

ஆரணியாறு

ஆந்திராவில் தொடங்கி பெரியபாளையம், ஆரணி, பொன்னேரியை வந்தடைந்து, லட்சுமிபுரம், மனோபுரம், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, பெரும்பேடு, தத்தைமஞ்சி, வழியே பழவேற்காடு ஏரிக்கு சென்று, வங்க கடலில் கலக்கிறது ஆரணியாறு.

வெள்ள பாதிப்பு

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக, பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், பெரும்பேடுக்குப்பம், ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கின.அத்துடன், வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்து, பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியது.ஆனால், வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்து சுமார் 8 மாதங்களைக் கடந்தும் வெள்ளத்தால் சேதமடைந்த ஆற்றங்கரை, இன்றுவரை சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

சேதமடைந்த கரைகள்

இன்னும் இரண்டு மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், ஆற்றங்கரை சீரமைக்காததால் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.கடந்தாண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து நெற்பயிர்களை அழித்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், ஆண்டுதோறும் மழை காலங்களில் கால்நடைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்கப்படாத கரைப் பகுதிகள் 

மழை காலங்களில் அமைச்சர் முதல் ஆட்சியர் வரை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்ற நிலையிலும், இன்றுவரைம கரை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. மழைக்காலங்களில் மட்டும் கம்புகளை நட்டு தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி விட்டு சென்றுவிடுவதாக புகார் தொரிவிக்கும் அப்பகுதி மக்கள், மழைக்காலத்திற்கு பின்னர் அந்த அரசு அதிகாரிகளும் கண்டு  கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரை உடைப்பு ஏற்பட்டதால் ஊரே வெள்ளக் காடாக மாறிய போது, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல், உணவுக்கு வழியின்றி தவித்ததை நினைவு கூறும் கிராம மக்கள், மழைக்காலம் தொடங்க உள்ளதால், மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அதே நிலை தொடருமோ என்ற  அச்சத்தில் உள்ளனர். ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் முழுமையாக கரையினை பலப்படுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ஒட்டு மொத்த கிரா மக்களின் கோரிக்கையாக உள்ளது. வடகிழக்கு பருவ மழை முன்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆற்றங்கரையை முழுமையாக சீரமைத்து, மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த ஆற்றங்கரையோர  கிராம மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற சூழல் உள்ளது