தமிழ்கடல் நெல்லை கண்ணனுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி!

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். நெல்லை கண்ணனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்கடல் நெல்லை கண்ணனுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி!

திருநெல்வேலியைச் சேர்ந்த இலக்கிய பேச்சாளர், நெல்லை கண்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சுவாமி சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் அவர் காலமானார்.

நெல்லை கண்ணனின் மறைவு செய்தியை அறிந்து தான் வருத்தமுற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், தமிழ் உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | தமிழ் மேடைகளில் ஓங்கி ஒலித்த குரல்...இன்று மூச்சை நிறுத்திவிட்டது..!

நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழ் இருக்கும் எனக்கூறினார். 

இதேபோல், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் மொழி மீதும், இலக்கியம் மீதும் அதிக ஆர்வம் கொண்டு, சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர் நெல்லை கண்ணன்.

பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்களில் முழங்கி, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தினார். காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழக்கம் வைத்திருந்த நெல்லை கண்ணன், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பேச்சாளராக இருந்தார்.

1996-ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து  போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து அதிமுகவை ஆதரித்த நெல்லை கண்ணன், சில காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம், அவரை மீண்டும் அரசியல் பேச வைத்தது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்ட மேடையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்தது, அவரை கைது நடவடிக்கையில் கொண்டு போய் நிறுத்தியது. 

சர்ச்சைப்பேச்சு; நெல்லை கண்ணன் 15 நாள் சிறையில் அடைப்பு: ஜாமீன் மனு நாளை  விசாரணை | Nellai Kannan sent in judicial custody - hindutamil.in

இறுதியாக, கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இவருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பேசிய அந்த நிகழ்ச்சியில், அரசியலில்தான் அநாதையாகி விட்டதாக கண்ணீர் சிந்தினார் நெல்லை கண்ணன். இந்த தலைமுறையினருக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை என முதலமைச்சரை பார்த்து நா தழுதழுக்க அவர் பேசினார். 

நெல்லை கண்ணன் மறைந்தாலும், அவரது நற்றமிழ் பேச்சுகள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.