செல்போன் கடையில் திருட்டு...வட மாநிலத்தவர்கள் கைது!

செல்போன் கடையில் திருட்டு...வட மாநிலத்தவர்கள் கைது!

பல்லடம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனதை சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு வட மாநில இளைஞர்கள் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னக்கரை கரைப்புதூர் சாலை லட்சுமி நகர் நால்ரோடு அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த சனுப் 30 என்பவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று காலை வழக்கம் போல கடையைத் திறந்து வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு கடையை பூட்டிவிட்டு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை அவரது கடையின் ஷட்டர் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவ்வழியை சென்றவர்கள் கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கடை திறந்து இருப்பது குறித்து கூறியுள்ளார். இதனை அடுத்து கடை உரிமையாளர் சனுப் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கடையினுள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார்  5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 64 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்து பார்த்த போது இரண்டு மர்ம நபர்கள் புகுந்து செல்போன்களை திருடி செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர் சனுப் கொடுத்த தகவலின் பெயரில் பல்லடம் குற்ற பிரிவு போலீசார் விடிய விடிய அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வடமாநில இளைஞர்கள் கைது

இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கையில் சாக்கு பையுடன் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாகூர் மேற்கு டெல்லியைச் சேர்ந்த சுதீப் குமார் ஆகிய இரண்டு வட மாநில இளைஞர்களும் செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 64 செல்போன்களையும் பறிமுதல் செய்த பல்லடம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிகாலையில் நடந்த செல்போன் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வட மாநில வாலிபர்களை உடனடியாக பிடித்து கைது செய்த பல்லடம் போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.