"திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள்" மு.க.ஸ்டாலின் விளாசல்!

"திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள்" மு.க.ஸ்டாலின் விளாசல்!

திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அமலாக்கத் துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது கைதை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பாஜகவின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டிய அவர், 10ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட பழைய புகாரை வைத்து அவரை 18 மணிநேரம் அடைத்து வைத்து இதய நோய் வரும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்தரவதை செய்துள்ளதாக கூறியுள்ளார்.  இப்படி ஒரு விசாரணை நடத்தும் அளவிற்கு நாடு என்ன அறிவிக்கபடாத அவசரநிலையில் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர் பாஜக தலைமை அமலாக்கத்துறை  மூலமாக தனது அரசியலை திணிக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்தியல் ரீதியாக அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி. அதுதான் அவர்களுக்கு தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோத செயலைத்தான் இந்தியா முழுக்க பின்பற்றுகிறார்கள். சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மியின் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் உள்ளிட்ட பலரது இடத்திலும் சோதனை நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் குஜராத்திலோ மத்திய பிரதேசத்திலோ உத்திரப்பிரதேசத்திலோ இதுபோன்ற சோதனைகள் நடைபெறாது. ஏனென்றால் அங்கு ஆட்சியில் இருப்பது உத்தம புத்திரன் பாஜகவினர் என விமர்சித்துள்ளார். 

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 10 ஆண்டுகளில் 112 என இருந்த அமலாக்கத்துறை சோதனைகள், பாஜக ஆட்சிக்கு வந்ததும் 3000 சோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் குற்றம் நிருபிக்கப்பட்டது வெறும் 0.05 சதவிகிதம்தான்  மற்றபடி, அனைத்தும் ரெய்டு என்ற பெயரிலான மிரட்டல்கள் தான் எனவும் கூறியுள்ளார்.  

இப்படி மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள், பாஜகவில் இணைந்ததும் புனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். இங்குள்ள அதிமுக அதற்கு ஒரு உதாரணம் என விமர்சித்த முதலமைச்சர், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை அதிமுகவினர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் தர தயாராக இருப்பதாகவும் அவர்கள் மீது ரெய்டு நடத்த அமலாக்கத்துறை தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை தனது கொத்தடிமையாக மாற்றுவதற்கு இதுபோன்ற ரெய்டுகளை பாஜக 2016,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து, அதிமுகவை போல அடிமை கட்சியல்ல திமுக எனச்சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிப்பதை போல ஒவ்வொரு திமுக காரரும் வளர்க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

"என்னை யாரும் அடிக்க முடியாது. நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்" என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பேசிய வாசகத்தை சுட்டிக்காட்டிய அவர் அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் திமுகவினர் நாங்கள் என்றும் திமுகவினருக்கு என தனித்த கொள்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், "மனித சமுதாயத்திற்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு விரோதமானவர்கள் நாங்கள். மிரட்டி பணிய வைக்க நினைத்தால் குனிய மாட்டாேம். நிமிர்ந்து நிற்போம். கொள்கையை காக்க கடைசிவரை போராடுவோம். திமுகவின் வரலாறே இதற்கு சாட்சி" என குறிப்பிட்டள்ளார்.

"இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறை இல்லை திமுகவின் போராட்டங்கள் எப்படிபட்டதென வரலாற்றை புரட்டி பாருங்கள் இல்லையெனில் டெல்லியில் இருக்கும் சீனியா்களை கேட்டுப்பாருங்கள். சீண்டிப்பார்க்காதீர்கள். திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை. ஒன்றிய அரசில் பொறுப்பில் உள்ள பாஜக பொறுப்பை உணர்ந்து, தனது எதேச்சதிகார போக்கை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!