பாகுபலி போய் கஜா வந்ததால், மேட்டுப்பாளையம் மக்கள் அச்சம்!!

பாகுபலி போய் கஜா வந்ததால், மேட்டுப்பாளையம் மக்கள் அச்சம்!!

மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் விரட்டப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு காட்டு யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுபட்டாரப் பகுதிகளை பாகுபலி என்ற ஒற்றைக் காட்டு யானை அச்சுறுத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சமயபுரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நடமாடுவதும், பயிர்களை பறித்து தின்பதுமாக இருந்து வந்தது. 

பெரும்பாலும் மனிதர்களை நெருங்காத இந்த பாகுபலி யானை, சமீபகாலமாக மூர்க்கத்தனமாக சுற்றித் திரிந்தது. கடந்த மாதம் தாசம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் மண்டபகத்தின் முன் பக்க கேட்டை உடைத்து கோயிலுக்குள் சென்றது பாகுபலி. மேலும் மருதமலை அடிவாரத்தில் ஒருவரை பாகுபலி தூக்கி வீசியதில் உயிர்ப்பலியும் ஏற்பட்டது. அதில் இருந்து நடவடிக்கையில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள், பாகுபலியை பிடிப்பதற்கு விஜய் மற்றும் வசீம் என இரண்டு கும்கி யானைகளை இறக்கினர். 

இதற்கிடையே வாய்ப் பகுதியில் பலத்த காயமடைந்த பாகுபலி யானை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் நிம்மதியாக இருந்த கிராம மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கஜா என்கிற மற்றொரு காட்டு யானை ஊருக்குள் புகுந்துள்ளது. பாகுபலி புறப்பட்ட 14 நாட்களிலேயே கஜா வந்துள்ளதால் கிராமத்தினர் வெளியே செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் ஜாலியாக சுற்றி வரும் கஜா, பசுமாடுகள் அசை போடுவதைக் கூட பார்த்து ரசித்து விட்டு, அவற்றை ஒன்றும் செய்யாமல் கடந்து செல்லும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கஜாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற மீண்டும் கும்கி யானைகள் வரவழைக்கப்பட வேண்டும், என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

இதையும் படிக்க: கேள்விக்குறியாகிய அரசு மருத்துமனைகள்... மருத்துவர் இல்லாததால், மருத்துவம் பார்த்த தூய்மை பணியாளர்!